
டெஃப் (TEFF) என்பது என்ன தெரியுமா? இது ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் பயிரிட்டு வளர்க்கப்படும் ஒரு சிறு தானியம். இதிலுள்ள அதிகளவு ஊட்டச் சத்துக்களின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இந்த தானியத்தை ஏற்றுமதி செய்து வருகின்றனர். சமீப காலமாக அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, பல்கேரியா போன்ற நாடுகளிலும் இது பயிரிடப்பட்டு வருகிறது. இதிலுள்ள ஊட்டச் சத்துக்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இது ஒரு க்ளூட்டன் ஃபிரீ (Gluten free)யான தானியம். எனவே, ஸீலியாக் (celiac) என்னும் க்ளூட்டன் ஒவ்வாமை நோய் உள்ளவர்கள் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டிய உணவு இது.
இதில் நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரோட்டீன், டயட்டரி ஃபைபர், இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின்-B போன்ற ஊட்டச் சத்துக்கள் எல்லாம் அடங்கியுள்ளன. இதை மாவாக அரைத்து பிரட், சாக்லேட் கேக், பாஸ்தா போன்ற உணவுகளாக சமைத்து உண்ணலாம். இது குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் (GI) கொண்டுள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகிறது. சர்க்கரையை மெதுவாக இரத்தத்தில் கலக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கப்பட்டு, நாள் முழுவதும் சக்தியோடு இருக்க உதவுகிறது.
இதிலுள்ள ப்ரோபயோடிக் ஃபைபரானது ஜீரண உறுப்புகளில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த நுண்ணுயிரிகளின் ஆரோக்கியமான வளர்ச்சி நம் உடலுக்கு அதிகளவு நோயெதிர்ப்புச் சக்தியைத் தருகிறது.
செரிமானம் சீராக நடைபெறுகிறது. இதனால் உடல் எடை குறைப்பும் ஏதுவாகிறது. மேலும், இதிலுள்ள லைசின் என்ற அமினோ அமிலம் எலும்பு வளர்ச்சிக்கும், அதிகளவு புரோட்டீன் எலும்புகளைப் பலப்படுத்தவும் உதவுகிறது.
ஆரோக்கிய மேன்மை கருதி, சமீப காலமாக ராகி, கம்பு, தினை, வரகு போன்ற சிறு தானியங்களை உண்ண ஆரம்பித்துள்ள நாம், டெஃப்பையும் உண்போம். மேலும் உடல் நலம் பெறுவோம்.