
தற்போது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டேபோகிறது. நமது வாழ்வு முறையும் உணவுப் பழக்கமும்தான் இதற்கு காரணம். சர்க்கரை நோயாளிகள் தாங்கள் இஷ்டப்படி எல்லா வகையான பழங்களையும் எடுத்துக்கொள்ள முடியாது. வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை அவர்கள் உண்ணக்கூடாது. அவர்களுக்கு நன்மை பயக்கும், எடுத்துக்கொள்ள வேண்டிய பழ வகைகள் என்னவென்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கொய்யா பழத்தை விட, கொய்யா காய் சாப்பிடலாம். பப்பாளி பழத்தை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது. கருப்பு திராட்சை, ஆப்பிளை மிதமான அளவோடு உண்ணலாம்.
2. பேரிக்காயில் ஆப்பிளை விட விட்டமின் ஏ, சி சத்து அதிகம் உள்ளது. இது பசியின்மையை போக்கி, ஜீரணத்தை அதிகரிக்கிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
3. நெல்லிக்காய் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு உகந்தது. விட்டமின் சி மற்றும் நார்ச்சத்து இதில் அதிகம் உள்ளதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
4. நாவல் பழத்தை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
5. பிளாக்பெர்ரி, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களில் ஆக்ஸிஜனேற்றிகள், விட்டமின்கள் நார்ச்சத்துக்கள் உள்ளதால் இவற்றைச் சாப்பிடலாம்.
6. நட்சத்திர பழத்தில் குறைந்த அளவு சர்க்கரை உள்ளதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
7. கிவி பழத்தில் விட்டமின் இ, கே மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதில் சர்க்கரையும் குறைவாக உள்ளதால் இவர்களுக்கு ஏற்றது.
8. டிராகன் பழத்தில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் நிறைந்துள்ளதால் இவற்றை உண்ணலாம்.
9. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு பழத்தை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். இது இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது.
10. அவகோடா பழங்களில் இருபதுக்கும் மேற்பட்ட வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளதால் இவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.