நாம் உண்ணும் உணவுகள் அனைத்துமே ஊட்டச்சத்து மிக்கவை, சுலபமாக செரிமானமாகக் கூடியவை என்று கூறிவிட முடியாது. சில வகை உணவுகள் ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்துக்கொள்பவைகளாக இருக்கும். வேறு சில உணவுகள் ஆரோக்கியமற்றதாக இருக்கவும் வாய்ப்புண்டு. இதுபோன்ற உணவுகளை உண்ணும்போது அஜீரணம், மலச்சிக்கல் போன்ற உடல் நலக்கோளாறுகள் உண்டாகின்றன. அப்படிப்பட்ட உணவுகள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கொழுப்புச் சத்து அதிகமாகவும் நார்ச்சத்து குறைவாகவும் உள்ள உணவு சீஸ். இது செரிமான செயல்பாடுகளை தாமதப்படுத்தி வயிற்றில் வீக்கமும் மலச்சிக்கல் உண்டாகவும் வழியேற்படுத்தும்.
சிப்ஸ், குக்கீஸ், க்ராக்கர் மற்றும் உறைவுற வைத்த டெஸ்ஸர்ட்ஸ் போன்ற உணவுகள் கொழுப்புச் சத்து நிறைந்தவை; நார்ச்சத்து மிகக் குறைவாகக் கொண்டவை. இவற்றை உண்பதாலும் வயிற்றுக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்புள்ளது.
பீஃப் மற்றும் போர்க் போன்ற ரெட் மீட்டில் (Meat) அதிகளவு சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. நார்ச்சத்து இதில் மிகவும் குறைவு. இவற்றை உண்ணும்போது வயிற்றில் அசௌகரியமும் மலச்சிக்கலும் உண்டாகும்.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை உபயோகித்து தயாரிக்கப்படும் வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து இல்லாததால் அதை உண்ணும்போது மலச்சிக்கல் வரும் வாய்ப்புள்ளது. முழு கோதுமை உபயோகித்து தயாரிக்கப்படும் பிரவுன் பிரட் சாப்பிடுகையில் வயிற்றுக் கோளாறு வருவது தடுக்கப்படும்.
பிரென்ச் ஃபிரை, நக்கெட்ஸ், பஜ்ஜி போன்ற உணவுகள் அதிகளவு எண்ணெயில் பொரித்தெடுக்கப்படுபவை. இவை மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடியவை. செரிமானத்தையும் தாமதப்படுத்தும். ஏர் ஃபிரைட், கிரில்ட் மற்றும் பேக்ட் (baked) உணவுகளை உண்பது மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.
நன்கு பழுக்காத சிட்ரஸ் பழங்களை உண்ணும்போது அதிலுள்ள அமிலத்தன்மையானது வயிற்றில் எரிச்சலும் மலச்சிக்கல் உண்டாவதற்கும் வழி வகுக்கும்.
அதிகளவு வெள்ளை சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளும்போது அவற்றில் நார்ச்சத்து இல்லாத காரணத்தால் ஜீரணமாவதில் தாமதமாகிறது; மலச்சிக்கல் உண்டாகவும் வாய்ப்பாகிறது.
பதப்படுத்தப்பட்ட சுவையூட்டிகளான கெட்ச்சப், பார்பிக்யூ சாஸ் போன்றவற்றில் நார்ச்சத்து குறைவாகவும் சர்க்கரைச் சத்து அதிகமாகவும் உள்ளதால் இவையும் மலச்சிக்கலை உண்டாக்கக் கூடிய உணவுகளே.
எனர்ஜி பார் மற்றும் புரோட்டீன் பார் போன்ற உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும் சுகர், ஆல்கஹால் அதிகமாகவும் இருப்பதால் இவற்றை அதிகம் உண்பதால் ஜீரணக் கோளாறுகளும் மலச்சிக்கலும் உண்டாகக்கூடிய வாய்ப்பு அதிகம்.
மேலே கூறிய உணவுகளில் சிலவற்றைத் தவிர்த்தும் சிலவற்றை குறைந்த அளவில் உட்கொண்டும் நம் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வோம்.