நம் உடலின் ஆரோக்கியம் காக்க நாம் உண்ணும் உணவுகளில் உள்ள புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், மினரல்கள், கொழுப்புச் சத்துக்கள் போன்ற ஊட்டச் சத்துக்கள் உதவி புரிகின்றன. அவற்றுள் முக்கியமானது ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ஒமேகா 3 போலவே, ஒமேகா 6 கொழுப்பு அமிலமும் மூளையின் வளர்ச்சிக்கும், சிறப்பான இயக்கத்திற்கும் உதவுகின்றது. இந்த ஒமேகா 6 கொழுப்பு அமிலம் எந்தெந்த உணவுகளில் இருந்து கிடைக்கிறது? அதன் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சஃப் ஃபிளவர் ஆயில் என்பது ஒரு சமையல் எண்ணெய். ஒரு டேபிள் ஸ்பூன் சஃப் ஃபிளவர் எண்ணெயில் 12.7 கிராம் ஒமேகா 6 உள்ளது. இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும் ஒமேகா 9 கொழுப்பு அமிலமும் இதில் உள்ளது.
ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 10.8 கிராம் ஒமேகா 6 உள்ளது. ஒரு அவுன்ஸ் சன் ஃபிளவர் விதைகளில் 9.3 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் E மற்றும் மக்னீசியம் போன்ற அத்தியாவசியமான ஊட்டச் சத்துக்களும் உள்ளன.
ஒரு டேபிள் ஸ்பூன் கனோலா ஆயிலில் 2.66 கிராம் ஒமேகா 6 மற்றும் 0.13 கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அரை கப் டோஃபுவில் 3 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உள்ளது.
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் ஏறத்தாழ 1.8 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உள்ளது. ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 3.7 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உள்ளது. பாதாம் பருப்பு இதய ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது.
ஒமேகா 6 கொழுப்பு அமிலம் சருமம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம், இனப்பெருக்கம், மெட்டபாலிசம் போன்றவை சிறக்கவும் பெரிதும் உதவி புரிகின்றன.
மேற்கூறிய உணவுகளை தினசரி உட்கொள்ள, உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும் என்பதில் சந்தேகம் இல்லை.