தேன் (Honey) என்றாலே உடனே அதை சுவைக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றி நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊற ஆரம்பிக்கும். அந்த அளவுக்கு அதன் இனிப்பு சுவை தனித்துவம் கொண்டது. தேனில் இருக்கும் ஊட்டச் சத்துக்களின் அளவை விட அதிலிருக்கும் மருத்துவ குணங்கள் அதிகம். தேன் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்கம் மற்றும் மெட்டபாலிக் சின்ட்ரோம் போன்றவற்றை எதிர்த்துப் போராடி குணம் பெற உதவும். இரத்த நாளங்கள் தடிப்பாவதைத் தடுக்கும். ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியம் காக்க உதவும். தேன் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியல் குணம் கொண்டது. நெருப்புப் பட்ட காயங்களை ஆற்றவும், குழந்தைகளின் இருமலைக் குறைக்கவும் உதவும்.
இத்தனை நற்பயன்கள் தரக்கூடிய தேனை சில வகை உணவுகளோடு சேர்த்து உண்ணும்போது எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறான உணவுகள் எவை என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. ஓட்ஸ் மற்றும் கோதுமை தவிடு (Wheat Bran) போன்ற முழு தானியங்களால் தயாரிக்கப்படும் உணவுகளோடு தேன் சேர்த்து உண்பது நல்லதல்ல. ஏனெனில், அந்த உணவுகளிலிருக்கும் இரும்புச் சத்து மற்றும் சிங்க் போன்ற ஊட்டச் சத்துக்கள் உடலுக்குள் உறிஞ்சப்படும்போது தேன் அச்செயலில் தடை ஏற்படக் காரணியாகும்.
2. தேனை மிகவும் சூடான திரவ உணவுடன் சேர்த்து உண்ணக் கூடாது. ஏனென்றால் தேனிலுள்ள நன்மை தரும் என்சைம்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அழிந்துவிடக்கூடும்.
3. அசிடிக் தன்மையுடைய சிட்ரஸ் பழங்களை தேனுடன் சேர்த்து உட்கொள்வது நல்லதல்ல. ஏனெனில், பழத்தின் அமிலத் தன்மையானது தேனை திரிய (Curdle) செய்வதுடன் அதன் சுவையையும் டெக்சரையும் பாதிப்படையச் செய்யும்.
4. தேனை பஜ்ஜி, போண்டா போன்ற பொரித்த உணவுகளுடன் சேர்த்து உண்பது நல்லதல்ல. ஏனெனில், இனிப்பும் கொழுப்பும் சேர்ந்த உணவை ஜீரணிப்பது கடினம்.
5. தேனை அதிகளவு உஷ்ண நிலையில் சமைப்பது ஆரோக்கியம் தருவதல்ல. அப்படி சமைக்கும்போது தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடைபட்டு அவை தரும் ஆரோக்கிய நன்மைகளில் குறைவேற்படும்.
6. ஒரு வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு தேனை சாப்பிடக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், தேனில் வளரும் பாக்டீரியா மூலம் குழந்தைகள் இன்ஃபேன்ட் பொட்டுலிசம் (Infant Botulism) என்ற நோய்த் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. அதனால் குழந்தைகளின் தசை பலவீனமடையும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். மருத்துவரை அணுக வேண்டிய சூழ்நிலையும் உருவாகும்.
7. யோகர்ட் போன்ற சில வகை பால் பொருட்களுடன் தேன் சேர்த்து உண்பதும் ஆபத்தானது. அப்படி உண்ணும்போது அந்த உணவில் உள்ள நுண்ணுயிர்ச் சத்துக்கள் குறைந்து அஜீரணம் உண்டாகவும் வாய்ப்பாகும். தேனில் இனிப்புச் சத்து அதிகம் இருப்பதால் டைப் 2 டயாபெட் நோயாளிகள் தேனை அதிகம் சாப்பிடுவது ஆபத்தானது. மகரந்தத் துகள் ஒவ்வாமை உள்ளவர்கள் தேன் உண்பதை தவிர்ப்பது நலம்.