
மனிதர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு உறுப்புகளும் வேலை செய்வதால் தான் நம்மால் இயற்கையாக நடமாட முடிகிறது. ஒரு உறுப்பு செயல் இழந்தாலோ, அல்லது கோளாறு ஆனாலோ உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.
அதனால் தான் அந்த காலத்தில் நேரம் சரியாக பயன்படுத்தப்பட்டது. அப்படி உங்களின் எந்த உறுப்பு எப்போது செயல்படும், எந்த நேரத்தில் எதை செய்தால் நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நிச்சயம் உதவும்.
விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை நுரையீரலுக்கான நேரமாகும். இந்த நேரத்தில் நீங்கள் மூச்சு பயிற்சி செய்வது, தியானம் செய்வது ஆயுளை நீட்டிக்குமாம். அதனால் தான் விடியற்காலையில் முழிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஆஸ்துமா, வீசிங் நோய் உடையவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி, மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் அதை குணப்படுத்தலாம்.
காலை 5 மணி முதல் 7 மணி வரை பெருங்குடலுக்கான நேரமாகும். இந்த நேரத்தில் காலை கடன்களை முடிக்க வேண்டும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மலச்சிக்கல் பிரச்சனையே ஏற்படாது.
காலை 7 மணி முதல் 9 மணி வரை வயிற்றின் நேரமாகும். இந்த நேரத்தில் சாப்பிடுவது ஜீரணமாகும். வயிற்று உபாதைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
காலை 9 மணி முதல் 11 மணி வரை மண்ணீரல் நேரமாகும். வயிற்றில் உள்ள உணவை செரிக்க செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக்கூடாது, தண்ணீர் கூட குடிக்க கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை இதயத்திற்கான நேரமாகும். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். இந்த நேரத்தில் இதயம் தனது வேலையை அதிகம் செய்யும் என்பதால், சத்தமாக பேசுதல், பதற்றமடைதல், கோபப்படுவதை தவிர்ப்பது நல்லதாகும்.
பகல் 1 முதல் மாலை 3 மணி வரை சிறுகுடல் நேரமாகும். இந்த நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது தவறு. இதனால் தான் மாலை ஸ்னாக்ஸ் டைமாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட்டு ஓய்வெடுப்பது நல்லதாகும்.
மாலை 3 மணி முதல் 5 மணி வரை சிறுநீர் பையின் நேரமாகும். இந்த நேரத்தில் சிறுநீரை வெளியேற்றுவது நல்லதாகும். சிறுநீர் அனைத்து நேரங்களிலேயே வந்தாலும், இந்த நேரத்தில் அதன் ஆற்றல் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் சிறுநீரை தேக்கி வைப்பது பிரச்சனையை உண்டாக்குமாம்.
மாலை 5 முதல் 7 மணி வரை சிறுநீரகங்களின் நேரமாகும். இந்த நேரத்தில் தியானம், இறைவழிபாடு செய்வது நல்லதாகும்.
இரவு 7 முதல் 9 மணி வரை பெரிகார்டியத்தின் நேரமாகும். இது இதயத்தை சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வாகும். இரவு உணவு சாப்பிட ஏற்ற நேரமாகும்.
இரவு 9 மணி முதல் 11 வரை உச்சந்தலை முதல் அடிவயிறு வரைக்கான நேரமாகும். இந்த நேரத்தில் அமைதியாக ஓய்வெடுப்பது அவசியமாகும்.
இரவு 11 முதல் 1 மணி வரை பித்தப்பை நேரமாகும். இந்த நேரத்தில் சாப்பிடாமல் ஓய்வெடுப்பது நல்லதாகும்.
இரவு 1 மணி முதல் 3 மணி வரை கல்லீரல் நேரமாகும். இதுதான் முக்கியமான நேரம் நமது வாழ்க்கையில், கல்லீரல் செயலிழந்தால் வாழ்க்கையே போய்விடும். இதனால் இந்த நேரத்தில் ஓய்வெடுப்பது அவசியமாகும். ரத்தத்தை கல்லீரல் சுத்தம் செய்யும் நேரம் என்பதால் அதை செய்ய விடாமல் சாப்பிடுவதோ, நடமாடுவதோ பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
அந்தந்த நேரங்களில் அதன் செயல்பாடுகளை செய்ய விடாமல் இருப்பதால் தான் உடல்நலப்பிரச்சனைகள் வருவதாக கூறப்படுகிறது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.