வைட்டமின் ஒவ்வொன்றும் நம் உடலில் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன. அதுபோல், வைட்டமின் பி குடும்பத்தை சேர்ந்த வைட்டமின் பி3 என்னும் நியாசின் நீரில் கரையும் வைட்டமின் ஆகும். இதனை நியாசின் - நிக்கோடினிக் அமிலம் என்றும் கூறுவதுண்டு. இதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது, இது குறைந்தால் என்னென்ன உடல் உபாதைகள் ஏற்படக்கூடும், அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகள் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
வைட்டமின் பி3 நம் உடலில் உள்ள ஜீரண உறுப்புகளின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றது .இரண்டாவதாக, சருமம் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிலும் இது முக்கியப் பங்கு வகிக்கின்றது. மற்ற பி குடும்பத்தைச் சேர்ந்த வைட்டமின்களைப் போலவே இந்த வைட்டமினும் நாம் உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றித் தருகிறது.
பெல்லக்ரா: நியாசின் குறைபாட்டால் பெல்லக்ரா என்னும் நோய் ஏற்படுகிறது. பெல்லக்ரா நோய் ஏற்பட்டால் சருமத்தில், குடலில் மற்றும் நரம்பு மண்டலத்தில் பிரச்னைகள் ஏற்படும்.
புண்கள்: வாய்ப்புண், நாக்கு புண் போன்றவை ஏற்படும். இப்படி ஏற்படும்போது வாய் மற்றும் நாக்கில் சிவப்பு ஏற்படுவது சகஜம். நாளடைவில் நாக்கில் புண் தீவிரமடைந்து விடுவதால் தொற்று நோய், வாந்தி உணர்வு, வயிற்றுப்போக்கு போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
சரும அலர்ஜி: சருமத்தை எடுத்துக் கொண்டால் சரும அலர்ஜி ஏற்பட்டு சிவந்த தடிப்புகள் ஏற்படும். கை விரல்களின் பின்புறம், முன்னங்கை, கால்கள் மற்றும் கணுக்காலின் மேல் இந்த அலர்ஜி ஏற்படும். இவை பின்னர் மோசமாகி கொப்பளங்கள் ஏற்பட்டு சருமத்தில் வெடிப்பு ஏற்படும். குணமாகும்போது தொற்று நோய் ஏற்பட்டு சருமம் உலர்ந்தும் மேற்பகுதி உறிந்தும் காணப்படும். இந்த சரும அலர்ஜியுடன் சூரிய வெப்பத்தில் இயல்பாக நடமாடினால் நோய் அதிகரிக்கும்.
நரம்பு மண்டலம் பாதிப்பு: பெல்லக்ரா நோய் தீவிரமடைந்தால் நரம்பு மண்டலம் பாதிப்படையலாம். அவ்வேளையில் நினைவாற்றல் குறைந்து போகும். இது தவிர நாள்பட்ட நோயாளிகளுக்கு தசைகளின் முறுக்கு அதிகரித்து விறைப்பாகும். நடப்பதில் சிரமம், இயற்கை உபாதைகளை வெளியேற்றுவதில் சிரமம் போன்றவை ஏற்படக்கூடும்.
பெல்லக்ரா நோயைத் தடுக்கும் உணவுகள்: பட்டாணி, வேர்க்கடலை, இறைச்சி, கல்லீரல் போன்றவற்றை சாப்பிடுவதோடு, மக்காச்சோள மாவினையும் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.
நியாசின் அதிகம் உள்ள உணவுகள்: உலர்ந்த பூஞ்சை, அரிசியின் உமி, கல்லீரல், பட்டாணி போன்றவற்றில் அதிக அளவு நிக்கோட்டினிக் அமிலம் இருக்கிறது. தானியங்கள், இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றிலும் நல்ல அளவில் நியாசின் இருக்கிறது. அரைத்த தானியங்கள், கோதுமை, கொண்டைக்கடலை, பால், முட்டை மற்றும் காய்கறிகளில் சுமாரான அளவு நியாசின் இருக்கிறது.
சருமப் பாதுகாப்பிற்கு மிகவும் தேவையான வைட்டமின் நியாசின். ஆதலால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் என்றால் உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியமே நல்ல ஆற்றலை கொடுக்கும். இதை நினைவில் கொள்வோம். அதற்கு ஏற்ப நியாசின் உணவுகளை எடுத்துக் கொள்வோம்!