விளையாடுவது குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அதோடு, ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. குறிப்பாக, ஆரம்ப காலத்தில் அவர்களை அதிகம் விளையாட அனுமதிக்க வேண்டும். விளையாட்டு, குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று. உடல் மற்றும் மனம் இரண்டின் வளர்ச்சியிலும் அது முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, குழந்தைகளை விளையாட பெற்றோர் வலியுறுத்த வேண்டும். குழந்தைகளை அவர்களாகவே விளையாட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பிரச்னைகளை தீர்க்கும் திறன்கள் தானாகவே வளரும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
குழந்தைகளை தினமும் ஒரு மணி நேரம் ஏதாவது ஒரு விளையாட்டில் கட்டாயம் ஈடுபடுத்துங்கள். அது அவர்களுக்கு பல்வேறு திறன் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அவை நினைவாற்றல் பெருக, கவனம் அதிகரிக்க, உணர்வுகளின் நலன் என அனைத்துக்கும் உதவுகிறது. குழுவாக இணைந்து செயல்படவும் உதவுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு மன வலிமை அதிகரிக்கிறது. விளையாட்டின்போது ஏற்படும் வெற்றி, தோல்விகள் அவர்களின் மன வலிமையை அதிகரித்து, வாழ்க்கையில் எத்தகைய சூழலையும் சமாளிக்கும் திறனை வளர்க்கிறது.
விளையாட்டின் மீது ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு மிக முக்கிய நன்மை என்பது உடல் திறனை சிறப்பாகப் பாதுகாக்க முடியும் என்பதுதான். குறிப்பாக ஹாக்கி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, தடகளம் ஆகிய விளையாட்டுகளில் கலந்துகொள்ள அதிக அளவிலான உடற்தகுதி அவசியம். இத்தகைய விளையாட்டுக்கள் உடற்திறனை சிறப்பாக பராமரிக்க உதவுகின்றன. விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு நேரத்தின் மகிமையை உணரும் திறன் உருவாகிறது. இதனால், அவர்கள் விளையாட்டில் மட்டுமின்றி, படிப்பிலும் கவனம் செலுத்த முடிகிறது.
பெற்றோர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும்போது, அவர்களுடன் ஆரோக்கியமான உறவை வளர்க்கிறது. அது குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கிறது. பேசிக்கொண்டே விளையாடும்போது அவர்களுக்கு கிரியேட்டிவிட்டி வளர்கிறது. உண்மை அனுபவங்களுடன் அவற்றைப் பொருத்திப் பார்க்கும்போது அவர்களுக்கு மேலும் திறன்கள் வளர்கின்றன. உள் அரங்க விளையாட்டுகளான செஸ், கேரம் போர்டு, பில்டிங் பிளாக்ஸ், பசில்ஸ், பிஸ்னஸ், கார்ட்ஸ் போன்ற உள் அரங்க விளையாட்டுகளை விளையாட குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். இதுவும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
தினமும் ஒரு மணி நேரம் வெளியே சூரிய வெளிச்சத்தில் விளையாடும் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை வருவது குறைவு என்கிறார்கள் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பொதுவாக ஒரு வீட்டில் முதலில் பிறக்கும் குழந்தைகள் அடுத்ததாக பிறக்கும் குழந்தைகளை விட கிட்டப்பார்வை பிரச்னைகளை 20 சதவீதம் அதிகம் சந்திக்கிறார்கள். இதற்குக் காரணம், அவர்களை விளையாட அனுமதிக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த பெற்றோர்கள் வலியுறுத்தியதுதான் காரணம் என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 5 வயது முதல் 17 வயது வரை தவறாமல் விளையாட்டுகளில் ஈடுபடும் குழந்தைகளின் எலும்புகள் முதுமை காலத்திலும் பலமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
உங்கள் குழந்தைகளை ஸ்கிப்பிங் விளையாட அறிவுறுத்துங்கள். காரணம், அது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, சிறந்த உடற்பயிற்சியும் கூட என்கிறார்கள் நிபுணர்கள். தினந்தோறும் ஸ்கிப்பிங் செய்வதால் உடலில் உள்ள உள் உறுப்புகளுக்கும், நரம்புகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். மன அழுத்தம் மற்றும் மந்தத்தன்மையை அது நீக்குகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயம், நுரையீரலின் செயல்பாடுகளை வலுப்படுத்துகிறது. கை, கால் தொடைப் பகுதி தசைகள் வலுவடைகின்றன.