உலக மனநல தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் பத்தாம் தேதி அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பல மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மனிதர்களுக்கு நல்ல உடல் நலனைப் போலவே மனநல ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். ‘மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்கத் தேவையில்லை’ என்று சித்தர்கள் கூறுகின்றனர். அதற்கான காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மனநல ஆரோக்கியத்தின் முக்கியத்துவம்:
உடல் ஆரோக்கியம்: மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு இடையே வலுவான தொடர்பு உள்ளது. மோசமான மன ஆரோக்கியம், பலவிதமான உடல் நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இதய நோய், உடல் பருமன், நீரிழிவு மற்றும் நாள்பட்ட உடல் வலி போன்றவை ஏற்படும் அல்லது அதிகரிக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக செயல்படும்.
வாழ்க்கைத் தரம்: நல்ல மன ஆரோக்கியம் உயர்தர வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது. நேர்மறை மன ஆரோக்கியம் மனிதர்களின் வாழ்க்கையை சிறப்பாக வாழ உதவுகிறது. அவர்கள் விரும்பும் செயல்களில் ஈடுபடவும் நிறைவான உறவுகளை பராமரிக்கவும் அனுமதிக்கிறது.
ஒட்டுமொத்த நல்வாழ்வு: மன ஆரோக்கியம் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. ஒரு மனிதர் எப்படி உணர்கிறார், நினைக்கிறார், செயல்படுகிறார் என்பதை பொறுத்துதான் அவருடைய செயல்பாடுகள் அமையும். மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன், பிறருடன் தொடர்பு கொள்வது மற்றும் முடிவுகளை எடுப்பது போன்றவற்றை பாதிக்கும்.
உறவுப்பாலம்: மனநலம் ஆரோக்கியமாக இருக்கப் பெற்றவர்கள் ஆரோக்கியமான உறவுகளை பராமரிக்கவும் நல்ல நட்புகளை உருவாக்கி அவற்றை சிறந்த முறையில் கட்டிக் காப்பதிலும் சிறந்து விளங்குகிறார்கள். உணர்ச்சிபூர்வமான ஆதரவிற்கும் தனிமை உணர்வைக் குறைப்பதற்கும் நட்பும் உறவுகளும் மிகவும் அவசியம்.
செயல் திறன்: மனநலம் ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்களால் நன்றாக செயல்பட முடியும். கல்வி, வேலை, திட்டமிடுதல், செயல்படுத்துதல், உற்பத்தித் திறன் போன்றவற்றைத் தருகிறது. நல்ல மன ஆரோக்கியமே ஒரு மனிதனுக்கு படைப்பாற்றல், கற்பனைச்செறிவு மற்றும் பணிகளை திறமையாக கையாளும் திறனையும் அளிக்கிறது.
தகவமைப்பு திறன்: மன நலன் சீராக இருந்தால்தான் வாழ்க்கையில் திடீரென்று ஏற்படும் இழப்பு அதிர்ச்சி போன்றவற்றை எதிர்கொள்ளவும், வாழ்க்கை மாற்றங்களை சமாளிக்கவும், சவால்களை எதிர்கொள்ளவும் முடியும். மன ஆரோக்கியம் உறுதியையும் திறமையையும் தகவமைப்புத் திறனையும் உருவாக்க உதவுகிறது.
நல்ல எதிர்காலம்: இளம் பருவத்தினருக்கு மனநல ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. அவர்களது கல்வி வளர்ச்சி மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு இது உதவுகிறது. ஆரோக்கியமான பெரியவர்களாக வளர்வதற்கு சிறுவயதில் இருந்தே மன ஆரோக்கியம் நன்றாக இருப்பது அவசியம்.
சமூக ஆரோக்கியம்: உயர்ந்த மனநலம் கொண்ட மனிதர்கள் பெரும்பாலும் பாதுகாப்பானவர்களாக அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக மேலும் கூட்டாக இணைந்து வாழவும் தொழில் செய்யவும் பணிபுரியவும் செய்கிறார்கள். ஆரோக்கியமான தனி நபர்கள் சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்கிறார்கள், சிறந்த ஒட்டுமொத்த சமூக ஆரோக்கியத்திற்கு வித்திடுகிறார்கள்.
எனவே, மன ஆரோக்கியம் மனிதர்களின் நிறைவான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான அடிப்படை தகுதியாகும்.