காலையில் எழுந்து குளித்து முடித்ததும், டியோடரண்ட் மற்றும் பர்ப்யூமை அடித்துக்கொள்வது நமக்கு அந்த நாளை புத்துணர்ச்சியோடு தொடக்கத்தை கொடுக்கிறது. இருப்பினும், நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வாசனை திரவியத்துக்கும், டியோடரண்ட், ரோல் ஆன் போன்றவற்றிற்குமே வித்தியாசம் தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? எதற்காக நாம் டியோடரண்டை பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
முதலில் Deodorants என்பது வேறு, Perfume என்பது வேறு என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நம் உடலில் தோன்றும் துர்நாற்றத்தை போக்குவதற்காகவே டியோடரண்டை பயன்படுத்துகிறோம். பர்ப்யூம் என்பது நிறைய வாசனை திரவியங்களைக் கொண்டு உருவாக்கக்கூடியதாகும். பர்ப்யூமை பயன்படுத்துவதால், நம்மைச் சுற்றி நல்ல வாசனையை அதிகரித்து நம்மை நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. பர்ப்யூமை பல்ஸ் பாயின்டில் அடித்துக்கொள்வதே சிறந்ததாகும். காதுக்கு பின்புறம், மணிகட்டு, கைமுட்டி போன்ற இடங்களில் பயன்படுத்த வேண்டும்.
டியோடரண்டை நமது சருமத்தின் மீதே அடிக்க வேண்டும். விளம்பரத்தில் காட்டுவது போல உடையின் மீது அதிகப்படியாக அடிக்கக் கூடாது. உங்களுக்கு எங்கே அதிகமாக வியர்க்கிறதோ அங்கே டியோடரண்டை பயன்படுத்த வேண்டும். அக்குள் போன்ற பகுதிகளில் குளித்து முடித்து வந்த உடனேயே காயவைத்துவிட்டு உடனேயே டியோடரண்ட்டை பயன்படுத்திவிட வேண்டும்.
அப்போதும் அதிகமாகப் பயன்படுத்தாமல் 2 அல்லது மூன்று ஸ்பிரேயை ஒரு அடி தூரத்தில் வைத்தே பயன்படுத்த வேண்டும். உடலில் வியர்ப்பதற்கு முன்பே இந்த டியோடரெண்டை உபயோகப்படுத்தி விடுவதால், இதனுடைய பலன் வெகுநேரம் நீடிக்கும். அதுமட்டுமில்லாமல் வியர்வையில் உருவாகும் பாக்டீரியாவையும் இது அழிக்கும்.
டியோடரண்ட் என்பது வியர்வை நாற்றத்தை போக்குவதற்காகவே தயாரிக்கப்பட்டது என்பதால் ஆடைகளில் அடிப்பதில் பயனில்லை. உடலில் படுவதுபோலப் பயன்படுத்துவதே சிறந்ததாகும். சிலருக்கு டியோடரண்ட் அலர்ஜியாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் Alcohol free டியோடரண்டை பயன்படுத்தலாம்.
சிலருக்கு அக்குள் பகுதியில் கருமையாக இருக்கும். அதுபோன்ற பிரச்னைகளை போக்க Roll on பயன்படுத்தலாம். Roll on வியர்வையில் உருவாகும் பாக்டீரியாவை அழிப்பதில் அதிகம் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, டியோடரண்ட் என்பது வேறு, பர்ப்யூம் என்பது வேறு. இரண்டுமே வெவ்வேறு பிரச்னைகளை போக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.