.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
அந்தக் காலத்தில் உடலில் ஏதேனும் அடிபட்டாலோ அல்லது வலி என்றாலோ நமது வீட்டில் உள்ள பெரியோர்கள் ஒரு கப்பில் வெறும் தண்ணீரை வைத்துக்கொண்டு அடிபட்ட இடத்தில் நீவி விடுவார்கள். உடனே நாமும் வலி மறந்து விளையாடப் போய் விடுவோம். அது எப்படி எந்த மருந்தும் இல்லாமல் வெறும் நீரால் நம் வலி போனது என்று யோசித்ததுண்டா?
நன்றாக ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் உடல் என்பது நமக்குக் கட்டுப்பட்டது. அதை நாம் நேசித்தால் அதுவும் நம்மை நேசித்து ஆரோக்கியமான வாழ்வு தரும். உதாரணத்துக்கு, திடீரென தலைவலி வந்து விட்டது. நம் கைகளால் கொஞ்சம் நெற்றியை அழுந்தத் தடவி விட்டால் எவ்வளவு இதமாக இருக்கும். நமக்கு நாமே செய்து கொள்ளும் இதுபோன்ற அழுத்தம் அல்லது மசாஜ்கள் நமது உடலுக்கு அவசியம் தேவைப்படுகிறது.
ஏதேனும் சென்டரில் போய் காசு தந்து மற்றவர்கள் கையினால் மசாஜ் செய்வதை விட, நம் உடலில் எந்த பாகத்தில் வலி இருக்கிறதோ அங்கு நமக்கு நாமே அன்புடன் மசாஜ் செய்வதால் விரைவில் வலி குறைந்து நிவாரணம் அடையலாம். காரணம் வலியை அனுபவிக்கும் நமது உடல் மனதின் வலிமையைக் குறைத்து வலியை மேலும் அதிகப்படுத்தும். ஆனால், ‘இது என் உடல். என் அன்றாட இயக்கங்களுக்காக உதவும் இதை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் நன்றியும் எனக்கு உள்ளது எனக் கூறி, மசாஜ் செய்யும்போது மனதில் ஒரு புத்துயிர் பிறக்கும். மனதில் எழும் இந்தப் புத்துணர்ச்சி வலியை நிச்சயம் குறைக்கும்.
மசாஜ் சென்டரில் செய்து கொள்வதற்கு பணம் மட்டுமல்ல, சில விதிமுறைகளும் உண்டு. குறிப்பாக வயிறு காலியாக இருக்கும்போதும் வயிறு முழுமையாக நிறைந்து இருக்கும்போதும் மசாஜ் செய்வதைத் தவிர்ப்பார்கள். காரணம் செரிமானப் பிரச்னை ஏற்படும் என்பதால். ஆனால், நம் வீட்டில் நமது ஓய்வு நேரத்தில் நமக்கு நாமே செய்து கொள்ளும் இந்த அழுத்தங்களுக்கு நமது விருப்பம் இருந்தால் மட்டும் போதும்.
ஆகவே, தினம் குளிக்கும்போது நம் கைகளால் நமது உடலின் பாகங்களை ஒவ்வொன்றாக அழுத்தம் தந்து குளியுங்கள். மசாஜ் செய்வதன் முக்கிய நன்மைகளில் ஒன்று இரத்த ஓட்டம் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதை அதிகரிப்பதன் மூலம் அதன் சீரான சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது, களைத்திருக்கும் தசைகளை தளர்த்தி புத்துணர்வு தந்து ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டை மேம்படுத்தி ஆரோக்கியம் வழங்குகிறது.
வாரம் ஓரு முறையாவது தலையிலும் உடலிலும் இளஞ்சூடான எண்ணெய் வைத்து உடலெங்கும் மசாஜ் செய்து கொள்ளுங்கள். இரவு படுக்கச் செல்லுமுன் பாதங்களை இதமாக பிடித்து விடுங்கள். நம் உடலின் ஒவ்வொரு பகுதிகளும் முக்கியத்துவம் கொண்டுள்ளன என்பதால் நமது உடலை நேசித்து மன அழுத்தம் குறைத்து நல் ஆரோக்கியம் பெறுவோம்.