
ஒரு பன்றியோட இதயத்தை மனிதனுக்கு பொருத்துவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?. ஒருவேளை உங்களுக்கு இது ஒரு மோசமான யோசனையாகத் தெரிந்தாலும், சமீபகாலமாக மருத்துவத் துறையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வரும் நடைமுறைகளில் ஒன்றுதான் இந்த ஜெனோ ட்ரான்ஸ்பிளான்டேஷன் - Xenotransplantation.
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் உலகில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகவும், அவர்களுக்குக் கிடைக்கும் உறுப்புகள் மிகக்குறைவாக இருப்பதுமே காரணமாகும். ஒவ்வொரு ஆண்டும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களுக்கும் குறைந்த அளவிலேயே டோனர் உறுப்பு கிடைக்கிறது. என்னதான் பெரும்பாலானவர்கள் தற்போது உறுப்பு தானம் செய்தாலும், அதன் தேவை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.
சரி, ஜெனோ ட்ரான்ஸ்பிளான்டேஷன் என்றால் என்ன?
ஒரு விலங்கினுடைய செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளை மனிதர்களுக்கு பயன்படுத்தும் நடைமுறைதான் இந்த ஜெனோ டிரான்ஸ்பிளான்டேஷன். அறுவை சிகிச்சை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சியைக் கொண்டு வரும் அளவுக்கு இந்த நடைமுறை தற்போது மேம்பட்டு வருகிறது.
இதுவரையில் இதைப் பற்றி நடந்து வந்த ஆராய்ச்சிகளில், பன்றியினுடைய இதயமானது மனித இதயத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டு நபர்களுக்கு பன்றி இதயம் வெற்றிகரமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், ஒரு நபர் சில மாதங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். இன்னொரு நபர் மருத்துவர்களுடைய கண்காணிப்பில் நலமாக இருக்கிறார்.
இந்த அறுவை சிகிச்சையில் உடனடியாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு எடுத்து பொறுத்தி விட முடியாது. அதற்கு முன்னதாக மனிதர்களுக்கு அது பொருந்தும் வகையில் மரபணு (ஜீன்) எடிட்டிங் செய்யப்பட வேண்டும். மரபணு எடிட்டிங் என்பது பன்றியின் மரபணு நிறைந்திருக்கும் இதயத்தில், மனிதர்களுடைய மரபணுவை மாற்றி அமைக்க வேண்டும்.
மரபணு எடிட்டிங் ஏன் செய்யப்படுகிறதென்றால், மனித உடலில் திடீரென்று ஒரு அந்நிய விஷயம் இணையும்போது, மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியானது, அதைத் தாக்கி அழிக்க முற்படும். எனவே, அவ்வாறு பொருத்தப்படும் இதயம் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியால் பாதிப்படையாமல் இருக்கவும், பொருத்தப்பட்ட இதயத்தை சுற்றி அதிகப்படியான திசுக்கள் வளர்ச்சியடையாமல் இருக்கவும் பன்றியின் இதயத்திற்கு ஜீன் எடிட்டிங் செய்யப்படுகிறது.
ஆராய்ச்சிகள் ஆரம்ப நிலையில் இருக்கும் தற்சமயத்தில், இந்த அறுவை சிகிச்சை மிகவும் ஆபத்தானது என்று எண்ணப்படுகிறது. மேலும், இதனுடைய வெற்றி வாய்ப்பும் அந்த அளவுக்கு உறுதியாக இல்லாமல்தான் இருக்கிறது. ஏனென்றால் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றும்போது, அவ்விலங்கினுடைய வைரஸ், பாக்டீரியா போன்ற விஷயங்கள் மனித உடலை பாதிக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும், மருத்துவர்கள் இதுசார்ந்த ஆராய்ச்சிகளை தீவிரமாக தொடர்ந்து வருகிறார்கள். எதிர்காலத்தில் ஜெனோ ட்ரான்ஸ்பிளான்டேஷன் ஒரு வெற்றிகரமான நடைமுறையாக மாற்றப்படலாம் என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.