பீட்ரூட் ஜூஸ் இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவும் ஒரு அற்புத பானமாக நம்பப்படுகிறது. ஆனால், இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு உண்மை? இந்தப் பதிவில் பீட்ரூட் ஜூஸ் மற்றும் இரும்புச்சத்து இடையே உள்ள அறிவியல் பூர்வ விஷயங்களை ஆராய்ந்து அதன் உண்மையைத் தெரிந்து கொள்வோம்.
பீட்ரூட்டில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அளவு வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. ஆனால், இரும்புச்சத்து குறித்து வரும்போது பீட்ரூட் மற்ற இறைச்சி மற்றும் பருப்பு வகைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான இரும்பையே கொண்டுள்ளது.
இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்படுவது பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடும். உணவில் உள்ள மற்ற பொருட்கள், உடலில் உள்ள இரும்புச்சத்து நிலை போன்றவை இரும்புச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கும். பீட்ரூட்டில் உள்ள சில பொருட்கள் இரும்புச்சத்து உறிஞ்சுகளைக் குறைக்கக்கூடும் என்பதுதான் உண்மை. பீட்ரூட்டில் ஆக்சிலேட் என்ற பொருள் உள்ளது. இதை இரும்புச்சத்துடன் இணைந்து கரையாத சேர்மங்களை உருவாக்கி இரும்புச்சத்து உறிஞ்சுதலை குறைக்கின்றன. மேலும், பீட்ரூட்டில் உள்ள பைப்டேட்டுகள் இரும்புச்சத்துடன் இணைந்து அது உடலால் உறிஞ்சப்படுவதைக் குறைக்கின்றன.
பீட்ரூட் ஜூஸ் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஒரு தீர்வாக இருக்குமா?
பீட்ரூட் ஜூஸ் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஒரு முழுமையான தீர்வாக இருக்காது ஏனென்றால் பீட்ரூட்டில் இரும்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது. இதனால், இரும்புச்சத்து குறைபாடு மிகவும் கடுமையாக இருந்தால் பீட்ரூட் ஜூஸ் மட்டுமே போதுமானதாக இருக்காது. பீட்ரூட்டில் உள்ள கலவைகள் இரும்புச்சத்து உறிஞ்சுதலை வெகுவாகக் குறைக்கின்றன. இரும்புச்சத்து உடலில் உறுதப்படுவதற்கு மற்ற ஊட்டச்சத்துக்கள் தேவை. உதாரணமாக, வைட்டமின் சி இரும்புச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கும்.
பீட்ரூட் ஜூஸ் ஊட்டச்சத்து மிக்க பானமாக இருந்தாலும், இரும்புச்சத்து குறைபாட்டிற்கு ஒரு முழுமையான தீர்வாக இல்லை. இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் மருத்துவரை அணுகி அவர்களின் ஆலோசனைப்படி இரும்புச்சத்து மாத்திரைகள் அல்லது இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். பீட்ரூட் ஜூஸ் ஒரு ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாமே தவிர அது மட்டுமே இரும்புச்சத்து குறைபாட்டிற்கான ஒரே தீர்வாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதே நேரம் பீட்ரூட்டை அதிகமாக சாப்பிடும்போது அதில் உள்ள ஆசிலேட்டுகள் கிட்னி கற்களை உண்டாக்கக்கூடும். எனவே, அளவுக்கு அதிகமாக எதையும் உட்கொள்ள வேண்டாம்.