“தயிருடன் சேர்த்து மீன் சாப்பிடக் கூடாது, மீறி சாப்பிட்டால் Vitiligo எனப்படும் வெண்புள்ளிகள் வரும்” என்ற கருத்து பல காலமாகவே நம்மிடையே பரவலாக இருந்து வருகிறது. ஆனால், இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு உண்மை? மீன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து உண்பதால், வெண்புள்ளிகள் ஏற்படுமா? என்பதற்கான உண்மையை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெண்புள்ளிகள் என்பது நம் தோலில் நிறமி குறைவதால் ஏற்படும் ஒரு சரும நோய். இந்த நோய்க்கு மரபணு, தன்னுடல்நோய் எதிர்ப்பு சக்தி, நரம்பு மண்டலக் கோளாறுகள் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் மீன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து உண்பது வெண்புள்ளிகளுக்கு காரணமாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஒரு அறிவியல் ஆய்வும் உறுதியான ஆதாரத்தை வழங்கவில்லை.
பின்னர், ஏன் அவ்வாறு சொல்லப்படுகிறது?
நம் முன்னோர்கள் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் பல உணவு தொடர்பான நம்பிக்கைகளை உருவாக்கினர். இந்த நம்பிக்கைகள் தலைமுறை தலைமுறையாக பரவி உண்மையாகவே நிலைத்து விடுகின்றன. மேலும் அந்த காலத்தில் அறிவியல் துறை இப்போது இருக்கும் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை.
இதனால், பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு அப்போது காரணங்களைக் கண்டறிய முடியவில்லை. இது தவிர, சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் போன்ற தளங்களில் உண்மைக்கு புறமான தகவல்கள் இப்போது வேகமாகப் பரவுகின்றன. இதனால், தவறான தகவல்கள், நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.
அறிவியல் என்ன சொல்கிறது? வெண்புள்ளிகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நம் தோளில் உள்ள மெலனின் என்ற நிறமி உற்பத்தி குறைவதே. மீன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து உண்பது மெலனின் உற்பத்தியை எந்த விதத்திலும் பாதிக்காது. வெண்புள்ளிகள் ஒரு தோல் நோய். இந்த நோய்க்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ஆனால், உணவுப் பழக்க வழக்கங்கள் வெண்புள்ளிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதற்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. சிலருக்கு மீன் அல்லது பால் பொருட்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம். இந்த ஒவ்வாமையால் தோல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆனால், அவை வெண்புள்ளிகளாக இருக்காது.
எனவே, மீன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து உண்பதால் வெண்புள்ளி ஏற்படும் என்பது முற்றிலும் தவறு.