
நம்முடைய தினசரி வாழ்க்கையில் பல் துலக்குவது (Brushing teeth) மிக அவசியமான ஒரு பழக்கமாகும். ஆனால் பல் துலக்கிய பிறகு நாம் செய்யும் சில தவறுகள் நம் பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை நாம் கவனிப்பதில்லை. இந்நிலையில், பல் துலக்கிய பிறகு தவிர்க்க வேண்டிய மூன்று முக்கியமான பழக்கங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. பல் துலக்கியவுடன் டீ அல்லது காபி குடிக்க வேண்டாம்!
காலையில் பல் துலக்கியவுடனே டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பல் துலக்கிய பிறகு பற்களின் மேற்பரப்பில் உள்ள எனாமல் (Enamel) மென்மையாக இருக்கும். அப்போது டீ, காபியில் உள்ள கஃபீன் மற்றும் நிறமிகள் பற்களின் மேற்பரப்பில் ஒட்டிக் கொண்டு கரைகளை ஏற்படுத்தும். எனவே பல் துலக்கியவுடன் டீ அல்லது காபி குடிக்க குறைந்தபட்சம் 20-30 நிமிடங்கள் இடைவெளி விட்டு குடிப்பது நல்லது.
2. டூத் பிரஷை மூடி வைப்பதை தவிர்க்கவும்!
பல் துலக்கும் பிரஷ் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்து மூடியுடன் மூடி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளன. ஆனால், அதனை மூடி வைப்பதால் ஈரப்பதம் அதிகரித்து பாக்டீரியாக்கள் வளரும். எனவே, பிரஷை திறந்த காற்றில், பாதுகாப்பான இடத்தில் வைத்து உலரச் செய்வது தான் சரியான வழியாகும்.
3. இரவு பல் துலக்கிய பிறகு தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்!
இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன் பல் துலக்குவது நல்ல பழக்கம். இது பற்களின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதும் கூட. ஆனால் சிலர் பல் துலக்கிய பிறகு உணவு அல்லது இனிப்பான பானங்களை உட்கொள்வதை பழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு செய்வதால் வாய் மற்றும் பற்களில் இரவு முழுவதும் பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சிதைவை ஏற்படுத்தும். எனவே இரவில் பல் துலக்கிய பிறகு தண்ணீர் தவிர வேறு எதையும் எடுத்துக் கொள்ளாமல் தூங்கச் செல்லுவது நல்லது.
பற்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் இரண்டு முறை பிரஷ் செய்வது மட்டும் போதாது, அதன் பிறகு செய்யும் செயல்களும் முக்கியமானவை. இப்படி எளிய பழக்கங்களை நம் தினசரி வாழ்க்கையில் கடைபிடிப்பதால் பற்களை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம். சிறிய மாற்றங்களால் தானே பெரிய பலன் கிடைக்கும்?
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)