குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பமளிக்கும் உலர் பழங்கள்!

குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பமளிக்கும் உலர் பழங்கள்!

குளிர் காலங்களில் உலர் பழங்கள் உடலை இளஞ்சூட்டோடு வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகின்றன. உலர் பழங்கள் பொதுவாக, வெப்பத்தை மிகுதியாகக் கொண்டிருப்பவை. இவற்றில் ஏராளமான ஊட்டச் சத்துக்களும், குறைந்த கிளைசெமிக் குறியீடுகளும் உள்ளன. உலர் பழங்களை தவறாமல் உட்கொள்வது உடலில் நீர் எடையை பராமரிக்கவும், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகின்றன. உடலை சூட்டோடு வைத்துக்கொள்ள உதவும் சில உலர் பழங்களை இந்தப் பதிவில் காண்போம்!

அத்திப்பழம்: அத்திப்பழங்கள் உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய தன்மை உடையவை. அதனால் குளிர்கால மாதங்களுக்கு சிறந்த உணவுப் பொருளாக இது விளக்குகிறது. அத்திப்பழங்களை குளிர்காலத்தில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று பழங்களாக உட்கொண்டு வந்தால் உடம்புக்கு நல்ல கதகதப்பினை கொடுக்கும். உடல் வெப்பமடைய வேண்டும் என்று விரும்புவர்கள் மூன்றுக்கு மேல் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

பாதாம்: அதேபோல், பாதாம் பருப்பும் உடல் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடிய தன்மை கொண்டதுதான். சாதாரணமான அதை ஊற வைத்து தோலினை நீக்கிவிட்டு சாப்பிடுவது வழக்கம். ஆனால், குளிர்காலத்தில் ஊற வைக்காமல் சாப்பிட்டால்தான் அதன் வெப்பம் உடலுக்குக் கிடைக்கும். ஊற வைத்தால் குளிர்ச்சி தன்மையை அதிகரிக்கச் செய்யும். ஆதலால் குளிர்காலத்தில் மட்டும் அதை ஊற வைக்காமல் சாப்பிடலாம்.

உலர் திராட்சை: இது கறுப்பு, பச்சை, பிரவுன் நிறங்களில் கிடைக்கின்றது. இந்த மூன்று வகை திராட்சையிலும் வைட்டமின் ஏ, பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. நார்ச்சத்தும் 2.8 கிராம் உள்ளது. இது மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையது. இதனை ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். உடலுக்கு உடனடியாக ஆற்றல் வழங்கக்கூடிய தன்மை கொண்டது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சக்தி கொண்டதாக இது அறியப்படுகிறது. ஆதலால், இது சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது. மேலும், இதை பதப்படுத்த அதன் மீது தெளிக்கப்படும் மருந்துகளை போக்குவதற்கு நன்றாக நீரில் சிறிது நேரம் ஊற வைத்து கழுவி விட்டு சாப்பிடுவது நல்லது.

வால்நட்: அக்ரூட் பருப்புகள் வெப்பமயமாதல் விளைவைக் கொண்டிருப்பதால் அதை உடைத்து அப்படியே சாப்பிடலாம். இது இரும்பு, கால்சியம், தாமிரம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளாகும்.

பேரீச்சைபழம்: இதில் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. இது இரத்த சோகையைப் போக்கும் தன்மை கொண்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com