அன்று முதல் இன்று வரை காலாகாலமாக பாகற்காய் நமது இந்திய உணவு வகைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் பாகற்காயைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவமான உணவு முறைகள் உள்ளன. என்னதான் பாகற்காய் கசப்பு சுவை கொண்டதாக இருந்தாலும், அதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இதை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வருவதால் உடலில் ஏற்படும் அதிசயங்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
பாகற்காய்க்கு ரத்த சர்க்கரை அளவை சீராக்கும் தன்மை உள்ளது. எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி பரிந்துரை செய்யப்படும் காய்கறியாகும். உடலில் ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதால் உடலில் உள்ள பல பிரச்னைகள் தடுக்கப்படுகின்றன.
நீங்கள் உங்கள் உடல் எடையை நிர்வகிக்க விரும்பினால் பாகற்காயை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால், உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதேநேரத்தில், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. ஆரோக்கியமாக உடல் எடையைப் பராமரிக்க விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.
சில ஆய்வுகளில் பாகற்காய் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இது கல்லீரல் மேம்பாட்டை ஊக்கப்படுத்தி, அதில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டுமொத்த சுத்திகரிப்புக்கும் பாகற்காய் பங்களிக்கிறது.
பாகற்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. பொதுவாகவே நார்ச்சத்தை உட்கொள்வது குடல் இயக்கங்களை ஆதரிக்கிறது. இது மலச்சிக்கலைத் தடுத்து, செரிமானப் பாதையிலுள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
பாகற்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மை இருப்பதால், இது இயற்கையாகவே உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கும் தன்மை கொண்டதாகும். இதனால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் விஷயங்களை நடுநிலையாக்க உதவுகிறது.
இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. உடல் நோய் தொற்றுக்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கும், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் விஷயங்களை அகற்றி, உடலுக்கு வலிமை கொடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு அமைப்பு பாகற்காய் உணவு அவசியமாகும். எனவே, வாரம் ஒரு முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.