
பொதுவாகவே, ‘உணர்ச்சிகளை அடக்கி வைக்க கூடாதென்று’ சொல்வார்கள். உண்மைதான், எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை வெளிக்காட்டி விடுவது நல்லது. தனக்குள்ளே வைக்கும்போது அது நமது ஆரோக்கியத்தை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவுகளில் இருந்து மட்டும் கிடைத்து விடாது. நம் சிந்தனை, பேச்சு, உபயோகிக்கும் வார்த்தைகள் என அதில் பல அடங்கியுள்ளது. அந்த உணச்சிகளில் முக்கியமானதுதான் 'கோபம்'. இதை காட்டினாலும் பிரச்னை காட்டாமல் இருந்தாலும் பிரச்னை. ஆனால் எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறும்போது தான் பிரச்னை உண்டாகிறது. 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்று சும்மா கூறப்படவில்லையே.
ஆம்! கோபம் என்பது ஒரு வகை உணர்ச்சிதான். அதை அடக்கியும் வைக்கக் கூடாது. அதிகமாகவும், காட்டக் கூடாது. கோபத்தை அடக்கி வைக்கும்போது நமது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் கோபத்தை காட்டும்போது நாம் எப்படி பாதிக்கப்படுகின்றோம் என்று உங்களுக்கு தெரியுமா?
இரண்டு வகையானவர்களை மாதிரியாகக் கொண்டு, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஒருவகை மனிதர்கள், அதிக கோபப்படுவார்கள், கெட்டவார்த்தைகளை உபயோகிப்பவர்கள். மற்றொரு வகை, அதிக இரக்கம், பொறுமையுடையவர்கள், அதிக கோபப்படாதவர்கள். இவர்களை வைத்து 20 வருடங்கள் நடத்திய சோதனையில், அதிகமாக கோபப்படாதவர்கள் அதிக மகிழ்ச்சியோடும், ஆரோக்கியத்தோடும், முக்கியமாக அவர்கள் வயதை விட இளமையாகவும் இருந்தார்களாம். ஆனால் அதிக கோபப்படுவார்கள் அதிக நோயுடன் இருந்ததோடு, அவர்கள் வயதை விட, அதிக வயதானவர்கள் போல் தோற்றம் கொண்டார்களாம். எனவே அளவுக்கு மீறி கோபம் கொள்ளும்போது நமது ஆரோக்கியம் பாதிப்பதோடு, நமது வெளித்தோற்றமும் பாதிக்கப்படுகிறது.
சிலர் கோபத்தை வெளிப்படுத்திய பின்புதான், கோபப்பட்டதையே உணர்வார்கள். அதற்கு பிறகு, அவசரபட்டு விட்டோமோ? தேவை இல்லாத வார்த்தைகளை கொட்டிவிட்டோமோ? என தனக்குள்ளே பல கேள்விகள் அவர்களை வாட்டி எடுக்கும்.
பிறர் மேல் கோபம் கொள்ளும்போது பேசும் கடும் சொற்கள் அவர்களை தாக்குவதை விட உங்களைத்தான் அதிகமாக தாக்கும். ஏனெனில், நீங்கள் பயன்படுத்திய சொற்கள் உங்கள் மூளையில் பதிந்து, முதலில் உங்கள் மனநிலையை தாக்கும், பின் நீங்கள் செய்யும் செயலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவே தொடர்ந்தால் உங்கள் மொத்த ஆரோக்கியமும் கண்டிப்பாக பாதிக்கப்படும்.
கோபத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முடியும் என்பதையும் ஒப்புக்கொள்ளலாமே. கோபம் ஒரு உணர்ச்சி என்றாலும் கோபத்தில் நீங்கள் பேசும் வார்த்தைகள் மிக முக்கியம். ஏனெனில், 'வார்த்தைகளுக்கு பவர் உண்டு’ என்பது நிதர்சனமான உண்மை. வார்த்தைகளால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முதலில் கோபப்படும் பொழுது கடும் சொற்களை தவிர்த்தாலே, கோபம் தானாக குறைந்துவிடும். உண்மையில், உங்களுக்கு கோபத்தை குறைக்க கடினமாக இருந்தால், மனதை அமைதிப்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு பாருங்கள். இது உதவியாக இருக்கும்.
தீர்வு என்ற ஒன்று இல்லாமல், பிரச்னை துவங்காது. கோபம் அனைத்திற்கும் தீர்வாக இருக்க முடியாது. முடிந்த அளவு பொறுமையுடன் செயல்படுங்கள்! ஆரோக்கியத்துடன் வாழுங்கள்!