குழந்தை திடீரென அழுகிறதா? உடனே இதைச் செய்யுங்கள்!

குழந்தைகள் திடீரென அழும்போது பதறாமல் செய்ய வேண்டிய எளிய முதலுதவி வழிமுறைகள் இதோ!
குழந்தை முதலுதவி
குழந்தை முதலுதவிAI Image
Updated on

'குழந்தையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்' என்று சொல்வது உண்மையே! குழந்தைகளின் சிரிப்பை பார்க்கும் பொழுது பெரியவர்கள் தங்களது கவலைகளை மறந்து குழந்தையோடு அவர்களும் குழந்தையாக மாறி விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் குழந்தை அழும்போது சில நேரங்களில் எதற்காக அழுகிறது என்று கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராத விபத்துக்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் போது முதலுதவியாக செய்ய வேண்டியவைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

குழந்தைகள் காதில் எதையாவது திணித்துக் கொண்டால் செய்ய வேண்டியது

குழந்தைகள் விளையாடும் போது காதினுள் சிலேட்டுக் குச்சி துண்டு, பட்டன், உருண்டையான மணிகள் போன்று எதையாவது திணித்துக் கொண்டால் கம்பியை விட்டு எடுத்து விடலாம் என நினைத்து அப்படி எதுவும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் பல்வேறு அபாயங்கள் ஏற்படும். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விட வேண்டும்.

காது வலியால் குழந்தை அழுவதை தெரிந்து கொள்வது எப்படி?

குழந்தைக்கு காது வலி ஏற்பட்டிருந்தால் குழந்தையின் அழுகை மிக ஆழ்ந்தும், ஓய்வில்லாமலும் கதறி அழும். அதன் கை, காதுப் பகுதிக்கு அடிக்கடி சென்று வரும். இதனைப் பார்த்தவுடன் உடனடியாக மருத்துவரிடம் சென்று விட வேண்டும்.

காதில் சீல் அல்லது ரத்தம் வந்தால் செய்ய வேண்டியது

காதிலிருந்து சீழ் அல்லது ரத்தம் வெளிப்பட்டால் பஞ்சு அல்லது மெல்லிய துணியால் ரத்தத்தை துடைத்து சுத்தம் செய்துவிட்டு சுத்தமான பஞ்சால் காதை அடைத்து மருத்துவரிடம் உடனடியாக சென்று விட வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் துணி அல்லது பட்ஸ் கொண்டு காதைக்குடைய முயற்சி செய்யக் கூடாது. மேலும் காதினுள் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றுவது, பச்சிலை சாறு பிழிவது போன்ற வேலைகளையும் தவிர்த்து விட வேண்டும்.

காதைக் குடைந்து சுத்தம் செய்யலாமா?

காதுகளில் உற்பத்தியாகும் மெழுகு பாதுகாப்பிற்காகவே உருவாகிறது. உள்ளே செல்லும் அழுக்கும் தூசிகளுடன் அவ்வப்போது வெளியேறிவிடும். ஆகவே காதுகளை பட்ஸ் அல்லது குச்சியால் துணியை சுற்றிக்கொண்டு குடைந்து சுத்தம் செய்தால் காது கேட்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே மெல்லிய துணியால் காதுகளை மென்மையாக துடைத்து விடுவதே சிறந்தது.

குழந்தைகளை குளிப்பாட்டும் போது செய்ய வேண்டியது

குழந்தைகளை குளிக்க வைக்கும் போது தேங்காய் எண்ணெயில் நனைத்த பஞ்சை உருட்டி காதுகளை அடைத்து விட்டு குளிப்பாட்டுவது பாதுகாப்பானது.

கீழே விழுந்த குழந்தைக்கு செய்ய வேண்டியது

கையிலிருந்தோ, தொட்டிலிலிருந்தோ குழந்தை கீழே விழுந்தால், தூக்கி எந்தப் பகுதியில் அடிபட்டுள்ளது என்பதை பார்த்து ரத்தக்கசிவு உடலில் எங்கேயாவது உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். கைக்குழந்தை என்றால் அதன் தலையில் உள்ள உச்சிக் குழியை தடவி பார்த்தால் வழக்கம்போல் இல்லாமல் புடைத்தோ கடினப்பட்டோ இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும். குழந்தையை தோளில் போட்டு தட்டி கொடுத்தும் அழுகையை நிறுத்தவில்லை என்றாலோ வாந்தி எடுத்தாலோ தாமதிக்காமல் மருத்துவமனை போய்விட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வயிற்றுப்போக்குக்கு ட்ரிப்ஸ் அவசியமா? பெற்றோர்கள் கவனத்திற்கு!
குழந்தை முதலுதவி

குழந்தையின் தொடர் வயிற்றுப்போக்கு செய்ய வேண்டியது

குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு இருந்தால் காய்ச்சி ஆற வைத்த நீரில் ஒரு டம்ளர் அளவிற்கு 2 ஸ்பூன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டும் கால் ஸ்பூன் உப்பு கலந்து வடிகட்டி வைத்துக் கொண்டு சிகிச்சைக்கு மருத்துவமனை செல்லும் வரை குழந்தைக்கு உடலில் தண்ணீர் சத்து குறையாமல் இருக்க 2 ஸ்பூன் முதல் 1 அவுன்ஸ் வரை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

கைக்குழந்தையாக இருந்தாலும், நடக்கும் குழந்தையாக இருந்தாலும் மருத்துவமனைக்கு செல்லும் வரை முதலுதவி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். அதைவிட எதைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் முதலுதவி செய்யும் முறையை அறிந்தவர் மட்டுமே அதில் ஈடுபட வேண்டும். வீட்டில் எப்போதும் ஒரு முதலுதவி பெட்டியை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தையின் உணவில் மறைந்திருக்கும் ஆபத்து! கவனமாக இருங்கள்
குழந்தை முதலுதவி
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com