
‘ரெஃப்லெக்ஸாலஜி’ (Reflexology) என்பது அக்குபஞ்சர், பாடி மஜாஜ் போன்று இதுவும் ஒரு சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையில் ஊசி போன்ற எந்த ஒரு பொருளையும் பயன்படுதுவதில்லை. குறிப்பாக, கை, கால், காது, கழுத்து போன்ற உடல் பகுதிகளில் இருக்கும் புள்ளிகளை அழுத்தம் கொடுத்து (Pressure Points) தூண்டிவிடுவதன் மூலம் உடல் பிரச்னைகளை சரி செய்ய இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
அதனடிப்படையில், பாதங்களில் மட்டும் இருக்கும் குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்தம் கொடுத்து சிகிச்சை செய்யும் முறையே பாத அழுத்த சிகிச்சை (Foot Reflexology) எனக் கருதப்படுகிறது. இந்த பாத அழுத்த சிகிச்சை முறையானது பலநூறு ஆண்டுகளாக அளிக்கப்படும் ஒரு அற்புதமான சிகிச்சை முறையாகும்.
பல நரம்புகள் சங்கமிக்கும் இடமாக பாதங்கள் விளங்குகின்றன. இங்குள்ள ஒவ்வொரு நரம்பும் ஒவ்வொரு உடல் உறுப்புடன் தொடர்புடையவை. இந்த நரம்புகளை அழுத்தம் கொடுத்து தூண்டி விடுவதன் வழியாக உடலின் இரத்த ஓட்டம் சீராக்குவதோடு உடலில் உள்ள வலி மற்றும் நோய்களைத் தீர்க்க முடியும் என ஆயுர்வேதம் சொல்கிறது.
பாத அழுத்த சிகிச்சை, நன்கு பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் உதவிடன் அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை அளிக்கத் தொடங்கும் முன், இரு கால்களும் நன்கு சுத்தம் செய்யப்படுகிறது. சுத்தம் செய்வதற்காக இளம்சூடான நீரானது பயனப்டுத்தப்படுகிறது. பின், ஒவ்வொரு காலுக்கும் தனித்தனியே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு காலில் சிகிச்சை அளிக்கும்போது, மற்றொரு கால் துணியால் இறுக்கமாக மூடப்படுகிறது. சருமம் வறண்டு போவதைத் தடுக்க இதுபோன்று செய்யப்படுகிறது. பிறகு, கால் பாதங்களில் உள்ள நரம்புகளுக்கு கைவிரல்களைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மூலிகை எண்ணெய் பயன்படுத்தி கால் பாதங்கள் நன்கு தேய்க்கப்படுகிறது. பின்னர், கால் பாதங்களை வருடி விட்டு, கணுக்கால் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சிகிச்சையின் முழுப் பலனைப் பெற வெறும் வயிற்றில் மேற்கொள்ளப்படுகிறது.
பாத அழுத்த சிகிச்சையால் கிடைக்கும் நன்மைகள்:
உடலில் ஏற்படும் முதுகு வலி, கால் வலி, கை வலி, மூட்டு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகளைப் போக்குவதற்கு சிறந்த தீர்வாக பாத அழுத்த சிகிச்சை உள்ளதாக கருத்தப்படுகிறது.
மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஹார்மோன் சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.
பாத அழுத்த சிகிச்சை தூக்கத்தை தூண்டுகிறது. இது வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்துகிறது.
உடலில் உள்ள பலவித நோய்களைத் தீர்க்க உதவிபுரிகிறது.
பாத சிகிச்சை முறையானது, பல நன்மைகளைத் தந்தாலும், கால் மற்றும் பாதப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு ஆபத்தாக முடியலாம். எனவே, மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்ற பின்னர் பாத சிகிச்சை முறையை மேற்கொள்வது சிறந்தது.