நம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் இரும்புச்சத்து மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஊட்டச்சத்தும் நம் உடலின் பல இயக்கங்களுக்கு உதவுகின்றன. அதேபோல, இரும்புச்சத்தும் நம் உடலின் பல முக்கிய இயக்கங்களுக்கு அவசியமான ஒன்று. ஆனால், இதைப்பற்றி தெரியாததால் பெரும்பாலான மக்கள் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இரும்புச்சத்துதான் நம் நோயெதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்தும் காரணியாகும். நம் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது.
இரும்புச்சத்து குறைபாடு?
உலக அளவில் பெரும்பாலான மக்கள் இந்த இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இது எல்லா வயதினரையும் பாதிக்கக்கூடும். ஆனால், இதில் வெகுவாக பாதிக்கப்படுபவர்கள் கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் தான். உடலுக்குத் தேவையான போதிய இரும்புச்சத்து இல்லாததால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து இரத்த சோகை ஏற்படும் அபாயம் உள்ளது. நமது உடலுக்கு சொந்தமாக இரும்புச்சத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் இல்லாததால் அதை உணவிலிருந்தே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து குறைபாட்டிற்கான காரணம்?
போதிய அளவு இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளாதபோது இந்த குறைபாடு ஏற்படுகிறது. மேலும் நமது உடலால் உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்ச முடியாதபோதும், இரத்த இழப்பு ஏற்படும்போதும் இந்த குறைபாடு ஏற்படுகிறது.
நமது உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள்:
இரும்புச்சத்தத்தின் குறைபாட்டின் முதல் அறிகுறியாக சோர்வு, பலவீனம் ஆகியவை அடங்கும். சில சமயங்கள் மூச்சுத் திணறல், தலை சுற்றல் கூட ஏற்படலாம். லேசான தலைவலி ஏற்பட்டு எந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த முடியாத மாதிரி செய்துவிடும். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு தொற்று நோய் பாதிப்புகள் எளிதில் ஏற்பட்டுவிடும். இத்தகைய அறிகுறிகள் வேறு பிற பிரச்னைகளால் கூட ஏற்படலாம் என்பதால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து தப்பிப்பதற்கு கால்சியம், நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிடுவதை நிறுத்துங்கள். இது நமது உடல் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மையை பாதிக்கிறது. இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் அளவோடு உட்கொள்வது நல்லது.
குறிப்பாக, இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ், விதை, பருப்பு, கீரைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. மேலும், வைட்டமின் சி சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வதும் இரும்புச்சத்து அதிகம் உறிஞ்சுவதை மேம்படுத்தும்.