காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மூலிகைகள் என அனைத்துத் தாவரப் பொருட்களிலிருந்தும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடிய ஏதாவதொரு ஊட்டச்சத்து அடங்கியிருப்பது நிதர்சனமான உண்மை. அந்தப் பொருட்களின் சுவையோ ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுவதும் நாம் அறிந்ததே. அவ்வாறான பொருட்களில் கசப்பு சுவையுடன் அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் அளிக்கக்கூடிய ஐந்து உணவுப் பொருட்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
பச்சை இலைக் காய்கறியான காலேயில் வைட்டமின் A, C, K, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இக்காய்க்கு கசப்புச் சுவையை அளிப்பது க்ளுகோஸினோலேட் (Glucosinolate) என்றொரு வகை கூட்டுப்பொருளாகும். இப்பொருளானது கேன்சர்நோய் வரும் அபாயத்தைத் தடுக்கக் கூடியது; இதய நாளங்களின் ஆரோக்கியம் காக்க பெரிதும் உதவி புரியக் கூடியது.
கசப்பு சுவை கொண்ட பாகற்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. ஆன்டி பாக்டீரியல் குணமும் உடைய பாகற்காய் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது; நோய் வரவழைக்கச் செய்யும் கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது; உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது.
லேசான புளிப்புச் சுவை கொண்ட ஆரஞ்சுப் பழத்தில் லைக்கோபீன் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் C, நார்ச் சத்துக்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவுகின்றன; இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன; எடைப் பராமரிப்பிற்கும் உதவுகின்றன.
ரபினி என்று அழைக்கப்படும் புரோக்கோலியில் வைட்டமின் A, C, K, கால்சியம், இரும்புச் சத்து ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. மேலும், இதிலுள்ள சல்ஃபோரஃபேன் என்ற கூட்டுப்பொருள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமும், கேன்சரை எதிர்த்துப் போராடும் குணமும் கொண்டது.
லேசான கசப்பு சுவை கொண்ட டார்க் சாக்லேட்டில் கேட்டச்சின் மற்றும் எபிகேட்டச்சின் போன்ற ஃபிளவனாய்ட்கள் உள்ளன. இக்கூட்டுப் பொருட்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட் குணம் கொண்டவை. இவை உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி இதய ஆரோக்கியம் காக்க உதவுகின்றன.
இவ்வாறான அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மேற்கூறிய உணவுப் பொருட்களை, கசப்பு சுவை சேர்ந்திருக்கும் காரணத்திற்காக ஒதுக்கி விடாமல் சாப்பிடப் பழகினால் உடல் ஆரோக்கியம் மேலும் மேம்படும்.