

தேன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். தேன் என்றாலே தனி சுவை தான். பலாபழத்தோடு தேனை ஊற்றி சாப்பிட கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே!!! ஆஹா!! குழந்தைகளுக்கு மருந்தை தேனில் கலந்து கொடுத்தால் சிரமமே இருக்காது. எளிதில் முழுங்கி விடுவார்கள். இருமல் அதிகமாக இருந்தால் சுக்கு திப்பிலி போன்றவற்றில் செய்த கசாயத்தோடு தேனை கலந்து குடித்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
ஆயுர்வேதத்திலும் சித்த வைத்தியத்திலும், இந்த தேனை அதிகம் பயன்படுத்துகிறார்கள். தேனில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் இருக்கின்றன. அதே சமயத்தில் தேனை, சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எந்தெந்த உணவுகளோடு தேனை சேர்த்து சாப்பிடக் கூடாதென்று பார்க்கலாமா... (What not to eat with honey?)
தேன் மற்றும் பூண்டு: தேன் பூண்டு இரண்டிற்குமே வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் சக்தி இருக்கின்றன. ஆகவே, இவை இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனை மற்றும் வாயுத்தொல்லை உருவாகலாம்.
தேன் மற்றும் சுடுநீர்: தேனை வெது வெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் தான் நன்மை கிடைக்கும். ஆனால் கொதிக்கும் நீரில் கலந்து சாப்பிடுவதால், அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்து போவதோடு மட்டுமல்லாமல் சுவையும் இருக்காது. மேலும் செரிமான பிரச்னைகளும் ஏற்படும்.
தேன் மற்றும் மீன்: இறைச்சி உணவுகளுடன் தேனை கலந்து சாப்பிடக் கூடாது. அதிலும் குறிப்பாக, மீன் மற்றும் சிவப்பு இறைச்சி சாப்பிடும் போது தேன் சாப்பிட கூடாது. இரண்டுக்கும் இடையில் குறைந்தது அரை மணி நேரம் இடைவெளி தேவை. இல்லை என்றால் நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்.
தேன் மற்றும் வெள்ளரிக்காய்: தேன் மற்றும் வெள்ளரிக்காயை சேர்த்து சாப்பிடுவதால், சரும பிரச்னைகள் மற்றும் செரிமான பிரச்னைகள் ஏற்படும் என்று ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகிறார்கள். பொதுவாகவே இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் பழக்கம் இல்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
ஆகவே, எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்ட தேனை சாப்பிடும் போது, மேலே கூறப்பட்டுள்ள பொருட்களை கலக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
முறையாக சாப்பிடும் போது தேன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். உடலில் இருந்து நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுதல், சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வது, உடல் பருமனை குறைப்பது என இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் தேன் மூலமாக நமக்கு கிடைக்கின்றன.