முடக்குவாதத்தை முறியடிக்கும் உணவுகள்!

முடக்குவாதத்தை முறியடிக்கும் உணவுகள்!

உலக மூட்டு நோய்கள் தினம் (12.10.2023)

முடக்குவாதத்தில் பல வகைகள் இருந்தாலும் பொதுவாக இந்நோய் குறைவான மற்றும் முறையற்ற எலும்புகள் பயன்பாட்டிலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களாலும், அதிக உடல் எடை காரணமாக எலும்புகள் தேய்மானம் அடைவதாலும் மூட்டுகளில் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது என்கிறார்கள். பொதுவாக, எலும்புகள் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் தன்மை உடையவை என்பதால் முடக்குவாத நோயை ஆரம்பத்தில் கவனித்தால் அதனைக் குணப்படுத்த முடியும். அதற்கு சரியான உணவுகளும், உடற்பயிற்சியும் அவசியம்.

மூட்டு வலி, முடக்குவாத நோய் பாதிப்புக்கு வைட்டமின் டி குறைபாடே முக்கியமான காரணம் என்கிறது ஆய்வு. எனவே, வைட்டமின் டி அதிகமுள்ள, ஒமேகா 3 அதிகமுள்ள, மீன், வால்நட், பூண்டு, இஞ்சி, திராட்சை மற்றும் அடர் பச்சை நிற காய்கறிகள், கீரை வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள். இதன் மூலம் எலும்பு வீக்கம், மூட்டு வலி குறையும், எலும்புகளை சுற்றி இருக்கும் தசைகளும் வலுப்பெறும் என்கிறார்கள்.

வாரத்துக்கு மூன்று முறை உடற்பயிற்சி செய்தால் ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டு கோளாறு உள்ளவர்களுக்கு வலி குறையும் என்கிறார்கள் கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இதற்கு சிறிய உடற்பயிற்சிகளே போதுமானது. (வீட்டை சுற்றி 6 நிமிடங்கள் நடைப்பயிற்சி, குனிந்து கைகளால் கால் பெரு விரலை தொடுவது; நாற்காலியில் உட்கார்ந்து எழுவது போன்றவை.) வாரத்துக்கு 45 நிமிடங்கள் விரைவாக நடப்பவர்களுக்கு முடக்குவாத நோய் தாக்கத்திலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் மெடிசின் அமைப்பு ஆய்வாளர்கள்.

தினசரி 2 அல்லது 3 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் சாப்பிட்டுவது உடலில் வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. இதனால் மூட்டு வலிகளின் தாக்கம் குறைகிறது என்கிறார்கள். அதேபோல், இரும்புச்சத்து அதிகம் உள்ள மாமிச உணவுகளும் மூட்டு வலி வராமல் தடுக்கும் என்கிறார்கள்.

மூட்டு வலி வராமல் தடுக்க தினமும் 150 மி. கி. வைட்டமின் சி தேவை என்கிறார்கள் பாஸ்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள். கொய்யா, ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களில் இது அதிகமாக இருக்கும். தினமும் இந்த மூன்றில் ஒவ்வொன்று சாப்பிட்டால் போதும். சிட்ரிக் ஆசிட் அதிகமுள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி அதிகமுள்ளது. இது மூட்டு வலியைக் குறைத்து, மூட்டுகளுக்கு பலம் சேர்க்கிறது.

ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால் அது உடலில் கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், மூட்டு வலிகளையும் குறைக்கிறது என்றும் ஒமேகா 3 சத்துள்ள மீன்களை வாரத்தில் மூன்று முறை சாப்பிட, மூட்டு வலிகளைத் தவிர்க்கலாம் என்கிறார்கள்.

மஞ்சள் மற்றும் வெள்ளைப்பூண்டு அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு முடக்குவாத அபாயம் பெருமளவு குறைக்கிறது என்பதை லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

ஒரு கப் கிரீன் டீயில் மூட்டு வலிகளைக் குறைக்கும் பாலிபிளோனயிட்ஸ் என்ற சத்து நிறைந்து உள்ளது. இது வலிகளைக் குறைக்கும். அதோடு மூட்டு பலவீனங்களையும் தடுக்கும். முடக்குவாத நோயால் ஏற்படும் முழங்கால் வலி, எரிச்சல் மற்றும் தசை நார் பாதிப்பு போன்றவைகளுக்கு கிரீன் டீ யிலுள்ள EGCG எனும் ரசாயனம் நல்ல நிவாரணம் அளிக்கிறது என்பதை வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

தயிர் குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகம் உருவாக்கும் ஆற்றல் மிக்கது. வலிகளைக் குறைக்கும் ஆற்றலும் தயிருக்கு உண்டு. எனவே, மூட்டு வாதம் உள்ளவர்கள் தினமும் தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

ஆர்த்ரைடிஸ் வலி உள்ளவர்கள் நிச்சயம் சில உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்காவிட்டால் வீக்கம், வலி மிகவும் அதிகரிக்கும். அதிக சோடியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுபோல, அதிக இரத்த அழுத்தம் ஆர்த்ரைடிஸ் வலியை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதிக சாச்சுரேடட் கொழுப்பு சத்து உள்ள உணவுகள் வீக்கத்தை அதிகரிக்கும்.

இனிப்பு வகைகளான கேண்டி சாக்லேட், ஐஸ் கிரீம் மற்றும் மற்ற இனிப்பு வகைகள், சாஸ் இதில் உள்ள சர்க்கரையில் எந்த பயன் தரும் சத்துக்களும் இல்லை என்பதால் இது வீக்கத்தை மேலும் அதிகரிக்கும். துரித உணவுகள், பேக் செய்யப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள்.  அதிக கொழுப்பு சத்து, சர்க்கரை, உப்பு உள்ளது. இது ஆர்த்ரைடிஸ் வலியை அதிகப்படுத்தும்.

சூரிய காந்தி எண்ணெய் அல்லது கனோலா எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இது நோயின் தன்மையையும், வலியையும் அதிகரிக்கும். ஆர்த்ரைடிஸ் வலி இருந்தால், மதுவை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுபோல, செயற்கையான ஸ்வீட்னர்களை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com