ஒருவரது உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, எலும்புகளிலும் மூட்டுகளிலும் யூரிக் அமிலம் படிந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு யூரிக் அமிலம் அதிகரிப்பதும் காரணமாகும். எனவே நமது உடலில் அதிகப்படியான யூரிக் அமிலம் சேராத அளவுக்கு நாம் பார்த்துக் கொள்வது அவசியம். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே அதிக யூரிக் அமிலத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அதிக விட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் அதன் தன்மை குறையும் என சில ஆய்வுகளின் படி கண்டறியப்பட்டுள்ளது.
உடலில் உருவாகும் யூரிக் அமிலமானது சிறுநீர் வழியாக வெளியேற்றப்பட வேண்டும். அது முறையாக வெளியேறாத போது கிரிஸ்டல்களாக மாறி மூட்டுகளில் படிய ஆரம்பித்து பாதிப்புகளை ஏற்படுகிறது. எனவே விட்டமின் சி சத்து ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை குறைத்து நம்மை பாதுகாக்கும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அதே நேரம் சில உணவுகளை உட்கொள்வது மூலமாக அதிக யூரிக் அமில பிரச்சனையை நாம் கட்டுப்படுத்த முடியும்.
பப்பாளி: பப்பாளியில் இயற்கையாகவே விட்டமின் சி சத்து மற்றும் நம்முடைய செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள் அதிக அளவில் உள்ளது. யூரிக் அமில பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒரு சத்தான சிறந்த தேர்வாக பப்பாளி பழம் அமைகிறது.
கிவி: கிவி பழம் விட்டமின் சி சத்தின் சிறந்த மூலமாகும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இந்த பழத்தை சாப்பிடலாம். இது உடலில் உள்ள பிளேட்லெட்களை அதிகரித்து டெங்கு பிரச்சனையை குறைக்க உதவும். யூரிக் அமில பாதிப்பு உள்ளவர்கள் கட்டாயம் கிவி பழம் சாப்பிட வேண்டும்.
ப்ரோக்கோலி: ப்ரோக்கோலி தினசரி எடுத்துக் கொள்வதால் உங்களுக்கு தேவையான அளவு விட்டமின் சி சத்து கிடைப்பது மட்டுமின்றி, உடலுக்கு தேவையான எண்ணற்ற வைட்டமின்களும் கிடைக்கிறது. இதை சாதாரணமாக உப்பு, மஞ்சள், மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
அன்னாசி: யூரிக் அமில பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு அன்னாசிப்பழம் நல்ல தீர்வைக் கொடுக்கும். இதில் உள்ள ப்ரோமிலேன் என்ற நொதி செரிமானத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
பொதுவாகவே புளிப்பு சுவையுடைய எல்லா பழங்களிலும் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. எனவே இவற்றை நீங்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடலாம். அதே நேரம் விட்டமின் சி நிறைந்த உணவுகளையும் அதிகம் எடுத்துக் கொள்ளாதீர்கள். நம்முடைய தினசரி தேவை என்னவோ அதற்கு ஏற்றவாறு எடுத்துக் கொண்டாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.