வானிலை ஆய்வு மையமானது ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களை வெப்ப அலை வீசும் காலமாக அறிவித்துள்ளது. இக்காலத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஜெயிக்க நாம் எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம் என மத்திய அரசின், ‘மினிஸ்ட்ரி ஆஃப் ஹெல்த் அண்ட் வெல்ஃபேர்’ துறை பொதுமக்களுக்கு ஓர் அறிவுரையை வெளியிட்டுள்ளது. அதன்படி நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளின் பட்டியலை இந்தப் பதிவில் காண்போம்.
ஸ்ட்ரா பெரி: ஸ்ட்ரா பெரி பழங்களில் தொண்ணூறு சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. இது உடலுக்கு நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது; நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை அதிகரிக்க வல்லது. மேலும், வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பழம் இது.
வெள்ளரி: இதில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. உடலை நீரேற்றத்துடன் வைப்பதற்கு ஏற்ற சூப்பர் உணவு. மேலும், இது உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்கவும் உதவுகிறது.
பைனாப்பிள்: நீர்ச்சத்தும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்த பழம் இது. உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். இதிலுள்ள ப்ரோமெலைன் என்ற என்ஸைமானது உணவிலுள்ள புரோட்டீன்களை உடைப்பதற்கு உதவி புரிந்து செரிமானம் சிறப்பாக நடைபெறச் செய்கிறது.
மஸ்க் மெலன்: இது அதிகளவு நீர்ச்சத்து கொண்டது. செரிமானம் சீராக நடைபெறவும் மலச்சிக்கல் நீங்கவும் உதவி புரிகிறது. இதிலுள்ள அதிகளவு கரோட்டினாய்ட் என்ற பொருள் கேன்சரை தடுக்கும் குணம் கொண்டது.
வாட்டர் மெலன்: நீர்ச்சத்து நிறைந்த பழம் இது. கோடைக் காலங்களில் மட்டும் கிடைக்கக் கூடியது. இதிலுள்ள சிற்றுலைன் (Citrulline) என்ற ஊட்டச்சத்தானது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் மனம் அமைதியான உணர்வு பெறவும் உதவுகிறது.
பச்சை இலைக் காய்கறி: பசலைக் கீரை மற்றும் காலே போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம். சுலபமாக செரிமானம் ஆகக் கூடியவை இவை. உஷ்ணம் நிறைந்த காலநிலையில் இவை ஜீரண மண்டல உறுப்புகளை ஆரோக்கியமாய் பாதுகாக்க உதவுபவை.
வெங்காயம்: இதை வினிகருடன் சேர்த்து உண்ணும்போது அது வெப்ப அலைகளுடன் போராடி உடலைக் காக்க உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மோர்: புரோபயோடிக் நிறைந்த குளிர்ச்சி தரும் பானம் இது. வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. உடலை நீரேற்றத்துடன் வைப்பதுடன் ஜீரண மண்டல உறுப்புகளையும் லேசான உணர்வுடன் வைக்க உதவுவது மோர்.
கரும்பு ஜூஸ்: நீரேற்றமும் குளிர்ச்சியும் தரக்கூடிய பானம். இதை ஃபிரஷ் புதினா இலைகள், பிளாக் சால்ட், இஞ்சி ஜூஸ், லெமன் ஜூஸ் ஆகியவற்றுடன் கலந்து குடிக்கும்போது அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
நாமும் மேற்கூறிய உணவுகளை வெயில் காலத்தில் தினசரி உட்கொண்டு நலம் பல பெறுவோம்.