குளிர்காலத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நான்கு உணவுகள்!

குளிர்காலம் வந்துவிட்டால் போதும், சளி, காய்ச்சல் என எங்கு பார்த்தாலும் நோயாளிகள் கூடாரமாகவே இருக்கும். அதுவும் இந்த கொரோனா நோய் வந்த பிறகு சொல்லவே வேண்டாம். ஒரு நபர் தும்மினாலே அச்சத்தில் பலரும் உறைகிறார்கள். இந்த மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாததே காரணம். உடலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் குளிர் காலங்களில் ஏற்படும் பல்வேறு நோய்களை தடுக்க முடியும். பொதுவாகவே, குளிர்காலங்களில் சுடு தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனென்றால், மழை அதிகமாக வருவதால் சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். அதனால் சுடு தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லதாகும். மேலும், குளிர்காலங்களில் ஜலதோஷம் பிடிப்பதால் நாக்கில் உணர்ச்சி இருக்காது. இதனால் என்ன சாப்பிட்டாலும் டேஸ்டும் தெரியாது, பிடிக்கவும் செய்யாது. இனி, குளிர்காலத்தில் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் சில உணவுப் பொருட்கள் குறித்து பார்க்கலாம்.
Immunity Boosting Foods for Winter
Immunity Boosting Foods for Winter

1. சர்க்கரை வள்ளிக் கிழங்கு:

சர்க்கரை வள்ளிக் கிழங்கு
சர்க்கரை வள்ளிக் கிழங்கு

பொதுவாகவே, கிழங்கு வகைகள் அனைத்தும் மிகவும் சத்தானவை. அதிலும் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் அதிக வைட்டமின், நார்ச்சத்து இருப்பதால் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், செரிமான பிரச்னையை சீராக்கும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு வேகவைத்து சாப்பிட்டாலே மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப் பிடிக்காதவர்கள் அதை கேக்காக செய்து கூட சாப்பிடலாம்.

2. பச்சை கொண்டைக் கடலை:

பச்சை கொண்டைக் கடலை
பச்சை கொண்டைக் கடலை

பச்சை கொண்டைக் கடலை உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பட்டியலில் முக்கியப் பங்கு வகிக்கும். இதில் புரோட்டீன் சத்து அதிகமாக இருப்பதால் உங்கள் தசை மற்றும் நார்சதையை வலுவாக்கும். பொதுவாக, தமிழ்நாட்டில் கருப்பு, வெள்ளை கொண்டைக்கடலையே அதிகமாகப் பார்த்திருப்போம். ஆனால், பச்சை கொண்டைக்கடலை ஒரு மிகச் சிறந்த உணவாகும்.

3. கம்பு:

கம்பு
கம்பு

கம்பு நமது பாரம்பரிய உணவாகும். நமது தாத்தா பாட்டி காலத்தில் கூட தினம் கம்பங்கூழ் சாப்பிடுவார்கள். அதனால்தான் அவர்களால் இன்று வரை அயராது உழைக்க முடிகிறது. கம்பில் அதிக நார்ச்சத்தும், நம் உடலுக்குத் தேவையான தாதுக்கள் இருப்பதாலும் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லதாகும்.

4. எள்:

எள்
எள்

எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்தான் எள். இதை நாம் பொடியாக அரைத்தும் சாப்பிடலாம் அல்லது இட்லி பொடியுடன் சேர்த்து அரைத்தும் சாப்பிடலாம் அல்லது வெறும் வாயிலேயே மென்றும் சாப்பிடலாம். முடியாதவர்கள் இதில் லட்டு செய்து கூட சாப்பிடலாம். எள்ளில் அதிக நன்மை உண்டு. கால்சியம் சத்து இதில் அதிகம் இருப்பதால் இது உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com