
தலைவலி என்பது பலருக்கும் ஏற்படும் பொதுவான உடல் அசவுகரியம் தான். ஆனால், சிலருக்கு அடிக்கடி தலைவலி வந்து அவர்களது உடல்நிலையைப் பாதித்து இயல்பு வாழ்க்கையையும் பாதிக்கும். அடிக்கடி உண்டாகும் தலைவலியினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தலைவலியின் வகைகள்
200 க்கும் மேற்பட்ட தலைவலிகள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சைனஸ் தலைவலி, மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, பதற்றத்தால் உண்டாகும் தலைவலி, மது அருந்துவதால் ஏற்படும் தலைவலி, நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தலைவலி, தூக்கம் குறைவதால் மற்றும் டென்ஷனால் வரும் தலைவலி என பல வகைகள் உண்டு.
அடிக்கடி ஏற்படும் தலைவலினால் உண்டாகும் உடல் பாதிப்புகள்
1. அஜீரணம்
உடலில் ஜீரண சக்தி குறைபாடு காரணமாக சிலருக்கு தலைவலி வரும். குடல் மற்றும் இரைப்பை பிரச்சனை உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். உண்ணும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆகி, கழிவுகள் வெளியேறி விட்டால் தலைவலி வருவது குறையும். குடல் சுத்தமே உடல் ஆரோக்கியத்தின் முதல் படியாகும். குடல் ஆரோக்கியம் கெட்டுவிட்டால் பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
2. ரத்த அழுத்தம்
நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கு ரத்த அழுத்த அளவுகள் சரியாக இல்லாவிட்டால் அவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போதும் வெகுவாக குறையும் போதும் தலைவலி வருகிறது. எனவே, ரத்த அழுத்தத்தை தொடர்ந்து சரி பார்த்துக் கொள்வது நல்லது.
3. மன அழுத்தம்
தற்போது மன அழுத்தம் என்பது பெரிய வியாதியாக மாறிக் கொண்டு வருகிறது. கல்வி, தொழில், அலுவலகப் பணிகள், நிதித் தேவைகள், தனிப்பட்ட வாழ்க்கை முறை, குடும்ப பிரச்சனைகளில் போன்றவற்றின் காரணமாக பெரும்பாலானோர் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மனதை லேசாக வைத்துக் கொள்ளா விட்டால், தலைவலியின் தீவிரம் அதிகரிக்கவே செய்யும்.
4. தூக்கக் கோளாறுகள்
சரியாக தூக்கம் இல்லாதவர்களுக்கு அல்லது மோசமான தூக்கம் உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். இவர்கள் சரியான நேரத்தில் தூங்கச் சென்று ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாள் பட்ட தூக்கக் கோளாறு நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.
5. கண் பிரச்சனை
கிட்டப் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். ஏனென்றால், இவர்களுக்கு மோசமான அல்லது பலவீனமான பார்வை, தலையில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் முறையான கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
6. ஒற்றைத் தலைவலி
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, மூளையில் ஏற்படும் ஒரு வேதியியல் தொந்தரவாகும். கடுமையான தலைவலியை ஏற்படுத்துவதோடு, குமட்டல், வாந்தி, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போதல் போன்றவையும் இதனுடைய பக்க விளைவுகளாக வரும். சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிடுவது, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
மாத்திரைகளால் ஏற்படும் தலைவலி
சிலர் லேசான தலைவலிக்கு தலைவலி மாத்திரை எடுத்துக் கொள்வார்கள் ஒரு கட்டத்தில் மூளை மருந்துக்குப் பழக்கம் ஆகிவிடும். அதன் அளவுகள் குறையும் போது தலைவலி அதிகமாகும்.
மூளை பாதிப்புகள்
நீண்ட காலமாக, அடிக்கடி ஏற்படும் ஒற்றைத் தலைவலி மூளையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மூளையில் கட்டிகள் தோன்றவும் வழி வகுக்கலாம். எனவே, இவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது அவசியம்.
பக்கவாதம்/ இருதய நோய்கள்
அடிக்கடி தலைவலி வருபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயமுண்டு. மேலும் ஒற்றை தலைவலியால், இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
எனவே, அடிக்கடி தலைவலி ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை மேற்கொள்வது நல்லது. மேலும் வாழ்க்கை முறையையும் இலகுவாக வைத்துக் கொண்டு, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)