ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஏற்றவாறு சூழ்நிலைகள் மாறும்போது அதற்கு ஏற்றவாறு நம்மை நாம் தயார் செய்து கொள்வது அவசியமாகிறது. ஏனெனில். பருவகால மாற்றங்களால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். இவற்றை தவிர்க்க அந்தந்த பருவங்களுக்கு ஏற்ற உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பருவ கால உணவுகள் என்று பார்க்கும்போது காய்கறிகளும் பழங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தற்போது மழை காலம் தொடங்க இருப்பதால் எல்லா நேரங்களிலும் குளிர் தனது வேலையை காட்ட ஆரம்பிக்கும். இத்தகைய வானிலையிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க தயாராக இருக்க வேண்டும். இதுபோன்ற குளிர்காலங்களில் நம் உடலை சூடாக வைத்திருக்க பல உணவுகள் இருந்தாலும், இந்த சமயங்களில் ஆரோக்கியத்தை காக்க உதவும் சில பழங்கள் பற்றி பார்க்கலாம்.
கொய்யாப்பழம்: குளிர்காலத்தில் நமக்கு எளிதாகக் கிடைக்கும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் உள்ளன. பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ உள்பட, பல சத்துக்கள் இதில் உள்ளன. எனவே, குளிர்காலங்களில் இதை கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு: வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் பொட்டாசியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, மழைக்காலங்களில் தொற்றுநோய் பாதிப்பில் இருந்து இது நம்மை காக்க உதவும். மேலும் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவதால் புற்றுநோய் அபாயமும் குறையும் என நம்பப்படுகிறது.
திராட்சை: திராட்சை பழங்களை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே, இது நமது செரிமான ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இதில் நிறைந்துள்ள இயற்கை பைட்டோ கெமிக்கல்கள் உடலில் உள்ள வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. அதேபோல, அழற்சி பிரச்னைகளின் அபாயத்தையும் குறைக்கக்கூடியது திராட்சை பழம்.
ஆப்பிள்: ஆப்பிள் பழத்தை ஆரோக்கியத்தின் புகலிடம் என்றே கூறலாம். குளிர்காலம் மட்டுமன்றி, எல்லா நாட்களிலும் நாம் சாப்பிட வேண்டிய ஒரு பழம் என்றால் அது ஆப்பிள்தான். பொதுவாகவே, தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. குளிர்காலத்தில் அதிகமாகக் கிடைக்கும் ஆப்பிள் பழங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடியது.
மேற்கூறிய பழங்களை மழைக்காலத்தில் நீங்கள் சாப்பிடுவதன் மூலமாக, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். அதே நேரம் தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கலாம்.