
கருப்பு, பச்சை என இரு வண்ணங்களில் நம்மை வசீகரிக்கும் திராட்சை, சுவையாக இருப்பது மட்டுமின்றி அதில் அடங்கியிருக்கும் ஏராளமான மருத்துவ குணங்களும் இதனை நாம் அனைவரும் விரும்பக் காரணமாக அமைகின்றன.
திராட்சையை தொடர்ந்து உட்கொள்வது சரும பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது. அதன் ஜூஸ் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை நிறைவாக வழங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் திராட்சையை சாப்பிட்ட பின் அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுவது வழக்கம். சிலர் விதையில்லாத திராட்சையையே விரும்பி தேர்வு செய்கின்றனர். ஆனால், திராட்சை விதையில் அடங்கியிருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் தெரிந்தால், இனி ஒருபோதும் நீங்கள் அதை தூக்கி எறிய மாட்டீர்கள்.
திராட்சை விதையின் அற்புதம்: திராட்சை விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மிகுந்த அளவில் உள்ளன. இவை உடலில் ஏற்படும் நச்சுத்தன்மையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. திராட்சை விதையை தொடர்ந்து மென்று சாப்பிட்டு வந்தால், இரத்த ஓட்டம் சீராகி, இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. இதனால், இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற ஆபத்துகளை தவிர்க்கலாம்.
திராட்சையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைத்து, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கின்றன. திராட்சை விதையை பொடி செய்து வெந்நீரில் கலந்து பருகினால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
திராட்சை விதையின் மற்ற பலன்கள்:
திராட்சை விதை நீர் இரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இரத்தக் குழாய்களை சுத்திகரிக்கிறது.
தினமும் ஒரு ஸ்பூன் திராட்சை விதை பொடியை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. மேலும் இதை, சூடான பாலில் கலந்து பருகி வந்தால், நினைவாற்றல் அதிகரித்து, மூளை நரம்புகள் வலுப்பெறும்.
திராட்சை விதை புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுத்து, உடலை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தோல் செல்களைப் புத்துணர்ச்சியூட்டி, தோல் பிரச்சனைகளை போக்கி, முகத்தை பொலிவாக காட்டுகிறது.
திராட்சை விதையை பயன்படுத்துவதற்கு அதை நன்றாக காய வைத்து, மிக்ஸியில் பொடி செய்து கொள்ளலாம். இதை தினமும் ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து பருகலாம் அல்லது பாலில் கலந்து குடிக்கலாம். அல்லது, திராட்சை விதையை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி குடிக்கலாம். திராட்சை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை தோலில் தடவி மசாஜ் செய்து சருமத்திற்கு ஊட்டம் அளிக்கலாம்.
திராட்சை விதையின் மருத்துவ குணங்கள் பற்றி இப்போது நீங்கள் நன்கு அறிந்து கொண்டிருப்பீர்கள். இனிமேல் திராட்சையை சாப்பிடும்போது, அதன் விதைகளை தூக்கி எறியாமல், அவற்றையும் சேர்த்து சாப்பிடுங்கள். இது உங்கள் உடல் நலனுக்கு மிகவும் நல்லது.