நினைவாற்றல், கவனிக்கும் திறன், ஊக்கம், நிறைவு போன்ற பல பாசிட்டிவ் விஷயங்களை நமக்குத் தரும் உணவு, மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் கூடவே கொடுக்கிறது. சிலவகை உணவுகளை சாப்பிடும்போது மூளையில் டோபமைன் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் நம் மனதுக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. அந்த உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. புரதம் நிறைந்த உணவுகள் உடனடி மகிழ்ச்சியை தருகிறது. 23 வகையான அமினோ அமிலங்கள் நம் உடலுக்குத் தேவை. இவற்றில் சிலவற்றை உடலே தயாரித்துக் கொள்ளும். பலவற்றை புரதம் நிறைந்த உணவுகள் மூலமே பெறுகிறோம். குறிப்பாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஆதாரமான டைரோசின், ஃபீனைல், அலனைன் ஆகிய அமினோ அமிலங்கள் முக்கியம். இறைச்சி, முட்டை, பால் பொருட்கள், சோயா, பீன்ஸ், பட்டாணி போன்றவற்றில் புரதம் அதிகம்.
2. நமது குடலை 'இரண்டாவது மூளை’ என்கிறார்கள். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நம் குடலில் இருக்கின்றன. இவையும் டோபமைனை உற்பத்தி செய்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் ஆரோக்கியமாக இருக்க புரோபயாட்டிக்ஸ் நிறைந்த உணவுகள் அவசியம். தயிர், மோர், பாலாடைக்கட்டி போன்றவற்றில் புரோபயாட்டிக்ஸ் உள்ளது.
3. பழுப்பு அரிசி, சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவை நார்ச்சத்து, வைட்டமின்களுடன் மாங்கனீசு சத்தையும் தருகிறது. இது எனர்ஜியும், புத்துணர்ச்சியும் தரும் ஆரோக்கிய உணவு.
4. பொட்டாசியமும், வைட்டமின்களும் நிறைந்த வாழைப்பழம் சாப்பிட்டாலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
5. நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் மூளையின் செயல்பாட்டை குழப்பி, மகிழ்ச்சி நிறைந்த உற்சாகத்தைத் தருகிறது. எனவே, அதிக கொழுப்புள்ள துரித உணவு வகைகளை தவிர்க்கவும்.
6. இயற்கையான சர்க்கரையும், ஆன்டி ஆக்சிடென்டுகளும் நிறைந்த ஆப்பிள் சாப்பிடுவதும் புத்துணர்ச்சியைத் தரும்.
7. வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்த ஓட்ஸ் ஒரு முழுமையான உணவு. இது உடலுக்கு சீரான ஆற்றல் தந்து நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறது.
8. ஸ்ட்ரா பெர்ரி, ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மன அழுத்தம் போக்க உதவுகின்றன.
9. பீட்ரூட்டில் நைட்ரேட் அதிகம் உள்ளது. இது உடல் முழுக்க ஆக்ஸிஜன் பரவலை அதிகரித்து உடனடி புத்துணர்ச்சியைத் தருகிறது.
10. டார்க் சாக்லேட்டில் கோகோ அதிகம். மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் செல்ல இது உதவுகிறது. இதனால் மனம் மகிழ்ச்சி அடைகிறது.
11. சியா விதை, ஆளி விதை, பூசணி விதை போன்றவை நம் உடலுக்கு சீரன ஆற்றலைக் கொடுத்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கின்றன.
12. முந்திரி, பாதாம், வால்நட் போன்ற கொட்டை வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. மேலும், இவற்றில் இருக்கும் வைட்டமின்களும், மினரல்களும் நம் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைக் கொடுக்கின்றன.
13. அவகோடா பழத்தில் ஆரோக்கிய கொழுப்பு அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் கொழுப்பை சீராக பராமரித்து நமக்கு சுறுசுறுப்பையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.
14. பப்பாளி பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, வைட்டமின் ‘சி' மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நமது தமனிகளில் அதிகப்படியான கொழுப்பு உருவாவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பதோடு நம் உடல் சோர்வையும் போக்கி மகிழ்ச்சியை அளிக்கிறது.
15. மாம்பழத்தில் வைட்டமின் 'சி' அதிகம் உள்ளதால் அதை சாப்பிடும்போது நல்ல கண் பார்வையையும், உடலுக்குத் தெம்பையும், முகத்தில் பொலிவையும், கொடுத்து புது இரத்த அணுக்களை உற்பத்தி செய்து நம்மை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்கிறது.