சமையலில் உபயோகித்து வரும் பல வகையான காய்கறிகள் மற்றும் ஸ்பைசஸ்களில் ஒன்று பச்சை மிளகாய். இதை நாம் சட்னி, உப்புமா போன்றவற்றில் சேர்த்து உபயோகிப்பது மட்டுமின்றி, குருமா, சாம்பார், ஊறுகாய், பச்சடி போன்ற பல வகையான டிஷ்களில் சேர்த்தும் சமைக்கிறோம். தாளிக்கும்போது பச்சை மிளகாயிலிருந்து வரும் தனித்துவமான மணம் உணவுக்கு மேலும் வாசனை சேர்க்கும். நம் முன்னோர்கள் கூழ் மற்றும் பழைய சாதம் போன்ற உணவுகளை உண்ணும்போது பச்சை மிளகாயை சைட் டிஷ்ஷாக அப்படியே கடித்து சாப்பிடுவதும் உண்டு. அந்த அளவுக்கு உபயோகப்படும் பச்சை மிளகாயில் கார சுவை தவிர்த்து பல ஆரோக்கிய நன்மைகளும் உண்டு. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பச்சை மிளகாயில் அதிகளவில் நிறைந்திருக்கும் வைட்டமின் Cயானது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
2. இதிலுள்ள கேப்ஸைசின் என்ற கூட்டுப் பொருள் மெட்டபாலிச ரேட்டை உயர்த்தவும், உடல் உஷ்ணத்தை உற்பத்தி செய்யும் (Thermogenesis) செயலில் பங்கேற்று மேம்படுத்தவும் உதவும். இதன் மூலம் உடலில் எரிக்கப்படும் கலோரிகளின் அளவு அதிகரிக்கும்.
3. கேப்ஸைசின் வலிகளைக் குறைக்கும் குணம் கொண்டதாகவும் உள்ளது. கேப்ஸைசின் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். இதனால் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகாமல் இதயம் பாதுகாக்கப்படுகிறது.
4. பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவை தீங்கு தரும் ஃபிரீரேடிக்கல்கள் மூலம் செல் சிதைவடையாமல் பாதுகாக்க உதவுகின்றன.
5. பச்சை மிளகாய் செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்கள் மற்றும் இரைப்பை சாறு (Gastric Juice)களின் உற்பத்தி அளவைப் பெருக்கவும் உதவி புரிந்து சிறப்பான செரிமானம் நடைபெற துணையாய் நிற்கும்.
6. பச்சை மிளகாயில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து உடலுக்குள் சென்றதும் வைட்டமின் A யாக மாற்றப்படுகிறது. வைட்டமின் A, பார்வைத் திறன் மேம்படவும், உடல் வளர்ச்சிக்கும், இதயம், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகள் சரிவர இயங்கவும் உதவி புரியும்.
7. பச்சை மிளகாயில் உள்ள டயட்டரி ஃபைபர் நீண்ட நேரம் வயிற்றில் தங்கி பசி ஏற்படும் உணர்வு வரும் நேரத்தை தாமதிக்கச் செய்யும். இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைந்து உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்க முடியும்.
பச்சை மிளகாயில் உள்ள காரம் மற்றும் எரிச்சல் ஊட்டும் தன்மை, உடலுக்குள் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தி விடாதபடி குறைந்த அளவில் இதை உபயோகித்து அதிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பெறுவோம்.