ஈறுகள் பேசுமே பற்களின் அழகை!

Gums speak the beauty of teeth
Gums speak the beauty of teethhttps://www.onlymyhealth.com

ண்ணை இமைகள் காப்பது போல், பற்களை அழகாக்குவது அதன் ஈறுகள்தான். பற்கள் பளிச்சிட வேண்டுமென்றால் அதற்கு ஆரோக்கியத்தை அள்ளி வழங்குவது அதன் உறுதியான ஈறுகள்தான். சிலருக்கு நீண்ட நேரம் சிரித்தால் கூட பல் ஈறுகளில் ரத்தம் வழியும். இதனால் அதன் நிறமே மாறிவிடும். இன்னும் சிலருக்கோ பற்களை சுற்றியுள்ள இடங்கள் சுகாதாரமின்றி இருக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டிய அன்றாட எளிய வழிகளை இந்தப் பதிவில் காண்போம்.

குறிப்பாக, பற்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள் பற்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். குறிப்பாக வைட்டமின் சி, கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

பச்சை காய்கறிகளை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் பற்கள் தூய்மை அடைவதுடன், ஈறுகளில் இரத்த ஓட்டமும் தூண்டப்பட்டு அதன் சுகாதாரம் மேம்படுத்தப்படும். தேங்காய் கீற்றுகளை பச்சையாக மென்று சாப்பிடலாம். இதனால் வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்.

பல் வலியின்போது கேரட், பீட்ரூட் போன்றவற்றை கடித்து சாப்பிட முடியவில்லை என்றால், சின்ன துண்டுகளாக நறுக்கி வெந்நீரில் போட்டு எடுத்து சாப்பிடலாம். இதனால் பற்களின் ஆரோக்கியம் மேம்படும். கரும்பு கிடைக்கும் காலங்களில் அதை மெல்லக் கடித்து சாப்பிடுவதால் பற்கள் சுத்தமாகும்.

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை அன்றாடம் உபயோகிக்கலாம். இதனால் பற்கள் உறுதிப்படும். புரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொண்டால் வைட்டமின் சி சத்து கிடைத்து பற்களில் இரத்தக் கசிவு ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஈறுகளில் நல்ல நிறமாற்றம் ஏற்படும்.

பால் பொருட்களை அதிகம் எடுத்துக் கொண்டால் அதில் கிடைக்கும் கால்சியம் சத்தானது பற்களை உறுதிப்படுத்தும். மணத்தக்காளி கீரையை கிடைக்கும் பொழுதெல்லாம் சாப்பிட்டு வரலாம். இரண்டு வால் மிளகை வெற்றிலையுடன் வைத்து மென்று விழுங்கி வர வாய்ப்புண், வயிற்றுப்புண், பல் ஈறு வலி, தொண்டைப்புண், குரல் கம்மல் அனைத்தும் சரியாகும்.

விளாங்காய் சதையை பச்சடியாக, துவையலாக செய்து பயன்படுத்தி வர வாய்ப்புண் ஆறும். விளாம்பழச் சதையுடன் சிறிது சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர பற்களில் தோன்றும் புண்கள், தொண்டைப்புண், வாய் நீரூறல் ஆகியவை தீரும்.

வேலம்பட்டையை நீரில் போட்டு வாய் கொப்பளிக்க பல்லாட்டம், பல் ஈறு வலிகள், வாய்ப்புண் அனைத்தும் நீங்கும். பல் தேய்க்கும் போது பல் ஈறுகளை விரல்களைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கி ஈறுகளை வலுவாக்கும். சிறிதளவு உப்பு கலந்த நீரை வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். நல்லெண்ணெய் ஊற்றி வாயில் சிறிது நேரம் வைத்திருந்து நன்கு கொப்பளித்து துப்பலாம்.

இதையும் படியுங்கள்:
ஆறு முதல் அறுபது வரை உள்ள வெற்றியின் ரகசியம் தெரியுமா?
Gums speak the beauty of teeth

கிராம்பு எண்ணெய், புதினா எண்ணெய்களை பற்களில் உள்ள புண்களின் மீது தேய்த்து வரலாம். அவ்வப்பொழுது பேக்கிங் சோடாவை தொட்டு பல் தேய்க்கலாம். பல் தேய்க்கும் பேஸ்டுடன் உப்பு கலந்து தேய்க்கலாம். கடுக்காய் பொடி கொண்டு பல் தேய்த்து பின்னர் பற்களை விரலால் அழுத்தி விட, பற்கள் உறுதி பெறும்.

ஆலங்குச்சி, வேலங்குச்சி, பேஸ்ட், பற்பொடி, திரிபலா சூரணம் என்று எதைக் கொண்டு பல் தேய்த்தாலும் தேய்த்த பிறகு விரல்களைக் கொண்டு ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை சீராக்கி, ஈறுகளை வலுவாக்கி இரத்தக் கசிவில் இருந்து பாதுகாக்கும் என்பது உறுதி. ஆதலால் பல் தேய்க்கும் போது இதை மட்டும் சற்று கவனமுடன் செய்தால் 50 சதவீதம் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com