உட்கார்ந்திருக்கும்போது கால் ஆட்டும் பழக்கம் இருக்கா உங்களுக்கு? போச்சு! 

Habit of Shaking Legs while sitting!
Habit of Shaking Legs while sitting!
Published on

பலர் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யும்போது, படிக்கும்போது அல்லது டிவி பார்க்கும்போது தங்கள் கால்களை ஆட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது பார்ப்பதற்கு ஒரு சாதாரணமான பழக்கமாகத் தோன்றலாம். ஆனால் இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் இது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். 

மனித உடல் ஒரு சிக்கலான அமைப்பாகும். இது எப்போதும் செயல்பாட்டில் இருக்கும். நாம் அசையாமல் இருக்கும்போது கூட நமது தசைகள் மற்றும் நரம்புகள் தொடர்ந்து சிக்னல்களை அனுப்பி அசைவை ஏற்படுத்துகின்றன. இது நமது ரத்த ஓட்டத்தைப் பராமரிக்க, தசை அசைவுகளை பராமரிக்க மற்றும் நமது உடலை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. 

உட்கார்ந்திருக்கும் போது கால் ஆட்டுவது என்பது தொடர்ச்சியான செயல்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும். இது பல்வேறு காரணிகளால் தூண்டப்படலாம். அவை என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

உட்கார்ந்திருக்கும்போது கால் ஆட்டுவதற்கான காரணங்கள்: 

உடல் ரீதியான அசௌகரியம்: நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது தசைப்பிடிப்பு, உணர்ச்சி இழப்பு மற்றும் குத்துதல் போன்ற உடல் ரீதியான அசௌகரியத்தை ஏற்படுத்தும். கால் ஆட்டுவது இந்த உணர்வுகளைத் தணிக்க உதவும். ஏனெனில், இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளை நீட்டி நரம்புகளைத் தூண்ட உதவுகிறது. 

மன அழுத்தம் மற்றும் பதட்டம்: மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை நமது உடலில் பல்வேறு உடல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். அதிக இதயத்துடிப்பு, வியர்வை மற்றும் தசை பதற்றம் ஆகியவை இதனால் ஏற்படும். கால் ஆட்டுவது இந்த பதற்றத்தை வெளிப்படுத்தி, உடலை அமைதிப்படுத்த ஒரு வழியாக இருக்கலாம். 

சலிப்பு: நாம் நமது வாழ்க்கையில் சளிப்படையும்போது நமது மனம் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருக்கும். இதனால், நமது உடல் செயல்பாட்டிற்கான ஏதேனும் ஒரு வழியைக் கண்டறியும். கால் ஆட்டுவது சலிப்பை போக்கி நமது மனதை செயல்களில் ஈடுபடுத்தும் உடலின் ஒரு தூண்டுதல் எனலாம். 

மருத்துவ நிலைகள்: சில நேரங்களில் கால் ஆட்டுவது ஒரு மருத்துவ நிலையின் அறிகுறியாக இருக்கலாம். Restless Legs Syndrome (RLS) போன்ற மருத்துவ நிலைமைகள் கால்களில் அசௌகரித்தை ஏற்படுத்தி அசைவுகளுக்கு வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
கால் ஆணி குணமடைய வேண்டுமா? இந்த இயற்கை வழிகளைப் பின்பற்றுங்கள்! 
Habit of Shaking Legs while sitting!

கால் ஆட்டுவதால் ஏற்படும் தீமைகள்:

நீங்கள் சதா எப்போதும் காலாட்டிக் கொண்டே இருந்தால் அது மற்றவர்களின் கவனத்தை சிதறடித்து, உங்களை விட்டு விலகிச் செல்லும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நீங்கள் பிறரிடம் பேசும்போது கால் ஆட்டுவது உங்கள் மீது கெட்ட மதிப்பை ஏற்படுத்தும். 

அதிகமாக கால் ஆட்டினால் கால்களில் வலி மற்றும் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இது மூட்டு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். RLS பிரச்சனை இருப்பவர்கள் அதிகமாக கால் ஆட்டினால் அதன் அறிகுறி மோசமடையலாம். 

நீங்கள் வேலை செய்யும் இடம் அல்லது பொது இடங்களில் கால் ஆட்டுவது உங்களது தொழில் சார்ந்த விஷயங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நீங்கள் அதிகமாக கால் ஆட்டும் பழக்கம் உள்ளவர் என்றால் அதை உடனடியாக நிறுத்திக் கொள்வது நல்லது. உங்களது கவனத்தை வேறு விஷயங்களுக்கு மாற்றுங்கள். புத்தகம் படித்தல், பாடல் கேட்பது அல்லது வேறு ஏதேனும் பிடித்த விஷயங்களை செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். 

அதிகமாக கால் ஆட்டுவதாகத் தெரிந்தால் கால்களை சிறிது நேரம் அசையாமல் இருக்க ஒரு மேஜையின் மேலே தூக்கி வையுங்கள். கால்களில் ஏதேனும் அசௌகரியம், வலி இருந்தால் சிறிது நேரம் நடப்பது நல்லது. இது உங்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கால்களில் உள்ள வலியைக் குறைக்க உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com