குறுந்தக்காளி அல்லது மரத்தக்காளி எனப்படும் டாமரில்லோ (Tamarillo) ஒரு வகை உண்ணக்கூடிய, சுவைமிக்க பழமாகும். இது தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டது. இதில் நம் உடலுக்குத் தேவையான பலவகை ஊட்டச் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
டாமரில்லோவில் வைட்டமின் A, C, E ஆகியவை அதிகம் உள்ளன. இவை பார்வைத் திறனை மேம்படுத்த, உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் வழங்கும் திறனுடையவை. வைட்டமின் Cயானது நாம் உண்ணும் தாவர உணவிலுள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவி புரிகிறது. இதனால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு உயர்கிறது.
டாமரில்லோவிலுள்ள கரையக் கூடிய நார்ச் சத்துக்கள் நல்ல முறையில் ஜீரணம் நடைபெற ஊக்குவிக்கின்றன; மலச் சிக்கலைத் தடுக்கின்றன; ஜீரண மண்டலத்திற்குள் உள்ள நன்மை செய்யும் பாக்ட்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி புரிகின்றன; தேவைக்கு அதிகமான கொழுப்பு உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலப்பதை தடுக்கின்றன.
இது குறைந்த கலோரி அளவு கொண்ட பழம். இப்பழத்தை உட்கொண்டு உடற்பயிற்சியும் செய்வோருக்கு சக்தியின் அளவு குறையாமல் எடை குறையும் வாய்ப்பு உள்ளது.
டாமரில்லோவில் கரோட்டினாய்ட் போன்ற பல ஆன்டி ஆக்சிடன்ட்கள் அடங்கியுள்ளன. அவை ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி, உடலில் நாள்பட்ட வியாதிகள் உண்டாகும் வாய்ப்பைத் தடுக்கின்றன; நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவுகின்றன.
இதிலுள்ள அமிலத்தன்மையானது கொழுப்பை எரிக்க உதவி புரிந்து மெட்டபாலிசம் சரிவர நடைபெற உதவுகிறது. க்ளோரோஜெனிக் என்ற அமிலம் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, டைப் 2 நீரிழிவு பாதிப்பைத் தடுக்கிறது.
இதிலுள்ள பொட்டாசியம், இரத்தத்திலுள்ள அதிகளவு சோடியத்தை குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைக்கு கொண்டு வர உதவுகிறது. பொட்டாசியமும் மக்னீசியமும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பேருதவி புரிகின்றன.
இது அழற்சியை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டது; புற்றுநோய் பரவ துணை புரியும் செல்களை எதிர்த்துப் போராடி அழிக்கும் குணமும் கொண்டது. இந்தக் குறுந்தக்காளியை அப்படியேவும் சாப்பிடலாம்; சாலட் செய்தும் உண்ணலாம்.