இயற்கை கருத்தரிப்புக்கு வழிவகுக்கும் செயற்கை சிகிச்சை!

இயற்கை கருத்தரிப்புக்கு வழிவகுக்கும் செயற்கை சிகிச்சை!

குழந்தைப் பேறு இல்லாமல் தவிப்புக்கு உள்ளாகும் இளம் தம்பதியரின் எண்ணிக்கை இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. திருமண வயதைக் கடந்து தாமதமாக இல்லற வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைப்பதும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும், வாழ்வியல் பழக்கங்களும் குழந்தை இன்மைக்கான முக்கியமான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. இன்றைய மருத்துவ உலகில் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான சிகிச்சை முறைகள் புதிது புதிதாக அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அவற்றுள் ஐ.வி.எப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறை பிரபலமானதாக உள்ளது.

திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதியர் இந்த சிகிச்சை முறையை அதிகம் நாடுகின்றனர். இந்தக் கருவுறுதல் சிகிச்சை முறை பலருக்கும் வெற்றிகரமாகவே அமைகிறது. சிலருக்கு ஒரே சமயத்தில் இரட்டை குழந்தைகளும் பிறக்கின்றன. ஒரு முறை செயற்கை கருத்தரிப்பில் சிகிச்சை மேற்கொண்டால், மீண்டும் இயற்கை முறையில் குழந்தையைப் பெற்றெடுப்பது அரிது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஐ.வி.எப். சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு, இயற்கை முறையில் கருத்தரிப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான ஆய்வுக்கு 1980 - 2021 வரை சிகிச்சையில் இருந்த ஐந்தாயிரம் பேரின் மருத்துவ ஆவணங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இந்த ஆய்வில் ஐ.வி.எப். போன்ற செயற்கை கருவுறுதல் சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு குழந்தை பெற்ற பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்குள் இயற்கையாகவே மீண்டும் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் பெண்கள் ஐ.வி.எப். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கர்ப்பமடைவது அரிது என்ற கருத்தை ஆய்வாளர்கள் தகர்த்தெறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐ.வி.எப். சிகிச்சைக்குப் பிறகு இயற்கை முறையில் கருத்தரித்து தாய்மை அடையலாம் என்ற கருத்தை இந்த ஆய்வு மூலம் முன்னிலைப்படுத்த விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com