சிரிப்பை அழகாக்கும் ‘பளீச்’ பற்கள்!

சிரிப்பை அழகாக்கும் ‘பளீச்’ பற்கள்!

டல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியம் கொடுப்பது போலவே, வாய்வழி ஆரோக்கியத்திலும் தனி கவனம் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் இனிப்பு வகைகள் மற்றும் எந்த வகை உணவுப் பொருட்களை சாப்பிட்டாலும் உடனே வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். இதனால் பற்களில் உள்ள உணவுத் துகள்கள் அகல்வதோடு, பற்களில் சொத்தை  விழாமலும், பற்களில்  மஞ்சள் கறை படியாமலும் தடுக்க முடியும். ஒருசில உணவுப் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுவது வாய் வழி ஆரோக்கியத்தை பேணவும், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். அதைப் பற்றிய பதிவுதான் இது.

பால் பொருட்கள்: பற்களை வலுவாக்குவதில் பால் பொருட்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. அவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் அவை பற்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கும். தயிரில் புரோபையாட்டிக்குகள் உள்ளன. மேலும், அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். தயிர், மோர், வெண்ணெய், நெய், பால் ஆடை கட்டியென ஏதாவது ஒரு வகையில் பால் பொருட்களை தினமும் உட்கொள்ளலாம்.

க்ரீன் டீ: தேநீரில் உள்ள புளோரைடு பற்களை வலுப்படுத்தவும், துவாரங்களை தடுக்கவும் உதவும். மேலும் அதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஈறு நோயை தடுக்க உதவி புரிகின்றன. குறிப்பாக, கிரீன் டீயில் ஃப்ளோரைடு மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. எனவே, கிரீன் டீ பருகி வருவது நல்லது.

ஆப்பிள்: தினசரி ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள மாலிக் அமிலம் பற்களை வெண்மையாக்க உதவும். தினசரி பழங்கள், காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வதால் அவை பற்கள் மற்றும் ஈறுகளுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்களைக் கொடுக்கும்.

நட்ஸ்: வாய்ப்பகுதியில் பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகமானால் பற்கள் மற்றும் ஈறுகளில் பிளேக் படரத் தொடங்கும். அதனை அகற்றாவிட்டால் மஞ்சள் பற்கள், பல் சிதைவு, ஈறு சார்ந்த நோய்களுக்கு வழி வகுக்கும். பற்களில் இருந்து பிளேக் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற நட்ஸ்கள் உதவும். உதாரணமாக, பாதாமில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளடங்கி இருக்கிறது. இவை இரண்டும் வலுவான பற்களுக்கு அவசியம்.

நீர்: பற்களின் ஆரோக்கியத்துக்கு தண்ணீர் நிறைய பருகுவது அவசியம். வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உமிழ் நீர் அவசியம். இது உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். மேலும், பற்சிதைவில் இருந்து பாதுகாக்கும் தாதுக்களும் நீரில் உள்ளன.

சூயிங்கம்: சர்க்கரை கலக்காத சூயிங்கத்தை சுவைப்பதும் வாய்வழி ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். ஏனெனில், சூயிங்கம் உமிழ்நீர் உற்பத்தியை தூண்டும். உணவு துகள்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்ற உதவும். ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அவ்வப்பொழுது கடுக்காய் பொடி, திரிசூரணப் பொடி போன்றவற்றைக் கொண்டு பல் துலக்கினால் பற்கள் உறுதிப்படும். ஈறுகள் வலிமையுறும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com