இளைஞர்களை அதிகம் தாக்கும் எலும்புப் புற்றுநோய்!

இளைஞர்களை அதிகம் தாக்கும்
எலும்புப் புற்றுநோய்!

ஸ்டியோசர்கோமா என்னும் எலும்புப் புற்றுநோய் பொதுவாக எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளில் உள்ள செல்களை பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நேரங்களில், எலும்புப் புற்றுநோய் கால் எலும்புகள் மற்றும் கை எலும்புகள் போன்ற நீண்ட எலும்புகளிலேயே தொடங்குகின்றன. எனினும், ஒருசிலருக்கு இந்த எலும்புப் புற்றுநோய் எலும்புக்கு வெளியே உள்ள மென்மையான திசுக்களில் இருந்து தொடங்கி பின்னர் எலும்புகளுக்கு பரவுவதாகவும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பெரும்பாலும் இந்தப் புற்றுநோய் இளைஞர்களையே அதிகம் தாக்குகிறது. ஆனாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நோய்க்கு ஆளாகலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எலும்பு, தசைகளில் மட்டுமின்றி, தசைநார், கொழுப்பு போன்ற எலும்புகளுக்கு அடுத்துள்ள திசுக்களிலும் இந்தப் புற்றுநோய் தோன்ற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இது மூளை போன்ற உடலின் பிற பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 

கை அல்லது கால்களில் ஏற்படும் கட்டியானது, நாளடைவில் திசுக்களில் வீக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தும். எனவே, கை அல்லது முழங்காலில் வலி ஏற்பட்டால் உடனடியாக கவனிப்பது நல்லது. திடீரென உடல் எடை வெகுவாக குறைவது மற்றும் உடல் சோர்வு போன்றவையும் இந்த நோயின் அறிகுறிகள்தான். இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. மேலும், எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இரத்த சோகை போன்ற அறிகுறிகள் தென்படலாம். அதாவது, இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல்நிலை மோசமாக பாதிக்கப்படும்.

இரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பிஇடி ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தால் இது தெரியவரும். பாதிக்கப்பட்ட பகுதியில் பயாப்ஸி சோதனை செய்து பார்த்தால்  புற்றுநோய் இருப்பது தெரியவரும். புற்றுநோய் கட்டி, எலும்பு புற்றுநோயின் வகை இவற்றை ஆய்வு செய்தபின் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com