குடல் புண் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாகச் செரிமானமாகும். நாள் ஒன்றுக்கு இரண்டு கப் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கலாம்.
தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது. தயிரை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டு வர, சிறந்த பலன்களைப் பெறலாம்.
முட்டைக்கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine) வயிற்றுப் புண்களை எதிர்க்கும் தன்மையுடையவை. இதனால் வயிற்றுப் புண்கள் வராமல் தடுக்கலாம்.
ஃபிரெஷ் திராட்சைப் பழங்களை ஜூஸ் பிழிந்து, வாரத்துக்கு மூன்று முறை அருந்தலாம்.
கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் ஏலக்காய் ஒன்று, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து சாறு பிழிந்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர, வயிற்றுப் புண் குணமாகும்.
அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில் உணவில் புதினாவைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
வாரத்துக்கு மூன்று நாட்கள் ஒரு டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடித்து வரலாம். ஒரு பெரிய ஸ்லைஸ் தேங்காயை நன்றாக மென்று விழுங்குவது நல்லது.

மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒருவகையில் இந்தக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
பாசிப் பருப்பு சேர்த்து கீரைக் கூட்டு செய்து, ஒரு கப் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வரலாம்.
முள்ளங்கி, புடலங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.