உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் அற்புதக் கிழங்கு!

உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் அற்புதக் கிழங்கு!

கொட்டிக்கிழங்கு என்ற ஒரு வகை கிழங்கு பொதுவாகவே எல்லா நீர் நிலைகளிலும் வளர்ந்திருக்கும். இந்தக் கிழங்குகளில் கருங்கொட்டி, கொட்டி, காற்றகொட்டி என மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. இதில் கருங்கொட்டியைத் தவிர மற்ற இரண்டும் மருத்துவ குணம் நிறைந்தவை.

கொட்டிக்கிழங்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மையுடையது. இனிப்பு சுவையுடைய இந்தக் கிழங்கு சமைத்து சாப்பிட சுவையாக இருக்கும். இதை பொரியல் செய்தோ அல்லது மாவாக அரைத்து கஞ்சியாகவோ கிராமத்து மக்கள் குடிப்பார்கள். இது அதிகப்படியான குளிர்ச்சி தன்மை கொண்டதால், இந்தக் கிழங்கை வெயிலில் உலர்த்தி பொடி செய்து காய்ச்சிய பாலில் கலந்தும் சாப்பிடுவார்கள். இதனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் போக்கு குணமாகும். மேலும், குழந்தைகளுக்கு ஏற்படும் சரும நோய்களும் சரியாகும். இந்தக் கிழங்கின் தூளை தேங்காய் பாலில் கலந்து படை, தேமல் போன்றவற்றின் மேல் பூசினால் விரைவில் ஆறிவிடும்.

உடல் உஷ்ணம் அதிகம் உள்ளவர்கள் கொட்டிக்கிழங்கு கஞ்சி செய்து பருகலாம். இதற்குத் தேவையான பொருட்கள்:

  • கொட்டிக் கிழங்கு மாவு - அரை கப்

  • பசும்பால் - அரை லிட்டர்

  • நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

  • தண்ணீர் - கால் லிட்டர்

செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கொட்டிக் கிழங்கு மாவை நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை அடுப்பில் வைத்து நன்றாக சூடாக்கி, மாவு கெட்டியாகாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

மாவு நன்றாக வெந்ததும் அதன் நிறம் மாறிவரும். அப்போது அதில் பசும்பால் மற்றும் தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி விடவும். சூடு தணிந்ததும் இந்தக் கஞ்சியை குடித்தால் உடல் உஷ்ணம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உடலில் அதிகப்படியான பித்தத்தன்மை உள்ளவர்களும் இந்தக் கஞ்சியை குடிக்கலாம். இதை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்போது உடலின் அடிக்கப்படியான பித்தத்தின் அளவு குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com