மலர்களின் ராணி ரோஜா: மருத்துவப் பயன்பாட்டிலும் உதவுமே ஜோரா!

செப்டம்பர், 22 - உலக ரோஜா தினம்
மலர்களின் ராணி ரோஜா: மருத்துவப் பயன்பாட்டிலும் உதவுமே ஜோரா!

ரோஜா மலர்களில் ராணி மட்டுமல்ல, மருத்துவப் பயன்பாட்டில் கூட ராணிதான். ரோஜாக்களில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இவை உடல் பலம் தந்து நரம்பு மண்டலத்துக்கு நன்மை தருகிறது. தொண்டை நோய், சளி, இருமல், சுவாசக் கோளாறு, நா வறட்சியை குணமாக்குகிறது. மேலும், சருமப் பிரச்னைகள் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது.

ரோஜா இதழ்களில் உள்ள துவர்ப்புச் சுவை வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும். ரோஜா இதழ்களை தேனில் கலந்து செய்யப்படும், ‘குல்கந்து’ மலச்சிக்கலைப் போக்கும். உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்று வலி நீங்க இது உதவும். ரோஜா இதழ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பன்னீர் மயக்கத்தையும் மனக் கவலையையும் போக்கும்.

ரோஜா பூவைக்கொண்டு செய்யப்படும் சுவையான சர்பத் இரத்த விருத்திக்கு ஒரு டானிக் ஆகும். இது உடல் உஷ்ணத்தை எப்போதும் சமநிலையில் வைத்திருக்க உதவும். களைப்பைப் போக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும். ரோஜா எண்ணெய் சருமப் புண்களை ஆற்றும். காது வலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் புண்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

ரோஜா பூக்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிடலாம்; இதழ்களை காயவைத்து பொடியாகவும் சாப்பிடலாம். ரோஜாவில் செய்யப்படும் கஷாயம் பித்தத்தை அகற்றும் தன்மையுடையது. இதய நோயுள்ளவர்கள் மலச்சிக்கலால் அவஸ்தை படும்போது ரோஜா பூக்களுடன் கற்கண்டு தேன் கலந்து வெயிலில் வைத்து சாப்பிட வேண்டும்.

வெற்றிலை போடுபவர்களுக்கு அவர்களின் வாயில் ஒருவித துர்நாற்றம் எழும். இதனைத் தடுக்க வேண்டுமென்றால் வெற்றிலையுடன் ரோஜா இதழ்களையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் துர்நாற்றமே வராது. காலை, மாலை என இரு வேளைகளும் ரோஜா இதழ்களைச் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் சீதபேதி இரண்டு நாட்களில் குணமாகி விடும்.

ரோஜாப்பூ கஷாயம் செய்து கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும். அத்துடன் காயங்கள் இருந்தால் ரோஜா பூக்கள் கலந்த நீரினால் கழுவலாம். ரோஜா இதழ்களை குளிர்மையான இடத்தில் வைத்து உலர்த்தி, நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு சரியாகும்.

ரோஜா இதழ்களை சம அளவில் பாசிப்பயறு சேர்த்து அதனுடன் நான்கைந்து பூலாங்கிழங்கு சேர்த்து விழுதாக அரைத்து அதை உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க, சரும நோய்கள் தீரும், சருமம் பொலிவோடு இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com