மூட்டு வலிகளைப் போக்கும் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு!

மூட்டு வலிகளைப் போக்கும் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, பரந்து விரிந்த நிலப்பரப்பும் அடர்த்தியான காடுகளையும் கொண்டது. சித்தர்களின் வாழ்விடமும் அவர்களைப் பற்றிய பேச்சுகளும், அவிழ்க்க முடியாத ஆச்சரிய கதைகளும் இங்கு ஏராளம். அதேபோல், இங்கே கொட்டிக் கிடக்கும் மூலிகைப் பொருட்களும் அவற்றின் மருத்துவ குண ஆச்சரிய தகவல்களும் ஏராளமாக இருக்கின்றன. கொல்லிமலையில்  எண்ணற்ற மூலிகைப் பொருட்கள், மூலிகைக் கிழங்குகள் காணப்பட்டாலும், முடவன் ஆட்டுக்கால்  கிழங்குக்கு தனி இடம் உண்டு.

முடவன் ஆட்டுக்கால் கிழங்கு என்னும் மூலிகை கிழங்கின் மேல் புறத்தில் உள்ள தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சூப் வைத்து குடிக்க, கை, கால் மூட்டு வலி நீக்குவதாக பலர் கூறுகின்றனர். ஆட்டுக்கால் ரோமம் போன்ற தோற்றம் இருப்பதாலும் அதன் சுவையும் அப்படியே இருப்பதால் இதை ஆட்டுக்கால் கிழங்கு என்கின்றனர். இந்தக் கிழங்கு சூப் தயாரிக்கும் முறை குறித்து இப்பகுதியில் வசிப்போரிடம் கேட்டபோது, “இந்தக் கிழங்கின் மேல் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பயன்படுத்தலாம். இல்லையெனில், சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று கூறுகின்றனர்.

மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் தேவையான தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து இந்த சூப் தயாரிக்கப்படுகிறது. கொல்லிமலையில் வசிக்கும் மக்கள் மற்றும் இங்கு சுற்றுலா வருவோர் இந்த முடவன் ஆட்டுக்கால் சூப்பை குடிக்கத் தவறுவதே இல்லை எனத் தெரிவிக்கிறார்கள். இந்த சூப் குடிப்பதற்காகவே கொல்லிமலைக்கு வருவோரும் பலர் உண்டு. அருவியில் குளித்துவிட்டு வருபவர்கள் இந்த சூப்பை குடித்தால் புத்துணர்ச்சி கிடைப்பதாகத் தெரிவிக்கின்றனர். தற்போது கொல்லிமலையில் இந்த மூலிகைக் கிழக்கின் அளவு பெருமளவில் குறைந்து வருவதால் இந்தக் கிழங்கை எடுக்க  வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இந்த முடவன்  ஆட்டுக்கால் கிழங்கு பயிரிடப்படுகிறது.

மலைப்பகுதியில் விளையக்கூடிய இந்த முடவன் ஆட்டுக்கால் கிழங்கு, பாலிபோடியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை புறணி செடி. பெரிய மரங்களின் மேல் படரும் ஒட்டு இடத்தைச் சேர்ந்த இந்த கிழங்கின் செடி மண்ணில் வளராது. பாறை இடுக்குகளிலும் மரங்களில் மீதும்தான் படர்ந்து வளரும் . டிரைனேரியா குர்சிபோலியோ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்தச் செடியின் வேர்தான் முடவன் ஆட்டுக்கால் கிழங்கு. இந்த மூலிகைக் கிழங்கு காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வளரக்கூடிய தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com