ஒரு முட்டையில் இருக்கா இத்தனை ஆற்றல்கள்?!

உலக முட்டை தினம் (13.10.2023)
ஒரு முட்டையில் இருக்கா இத்தனை ஆற்றல்கள்?!

லகளவில் நம் இந்தியா முட்டை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு நாளைக்கு சுமார் 20 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தியாகின்றன. 1996ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வெள்ளிக்கிழமையை உலக முட்டை தினமாக கொண்டாடப்படுகிறது.

நமது உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் ஒரு முட்டையில் உள்ளது என்கிறார்கள். ஒரு முட்டையில் வைட்டமின் ஏ, டி, இ, கே, பி5, பி6, பி12 மற்றும் போலேட் சத்தும் உள்ளது. அதோடு பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், தாமிரம் போன்ற முக்கியமான தனிமங்களும் உள்ளன. இவைதான் சருமம் முதல் மூளையின் செயல்பாடு வரை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆற்றலை வழங்குகின்றன. இதனால்தான் முட்டையை ஓர் இயற்கை மல்டி வைட்டமின் என்கிறார்கள்.

ஒரு முட்டை 6 கிராம் புரோட்டீனையும், 5 கிராம் ஆரோக்கியமான கொழுப்பையும், குறைந்த கலோரிகளையும் நமது உடலுக்கு வழங்குகிறது. உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் இதுவே போதுமான ஆற்றலை வழங்கிவிடும். புரதச்சத்து தேவையை பூர்த்தி செய்யும் அற்புதமான உணவுகளில் முட்டை முக்கியமானது. இதில் அத்தியாவசியமான 9 அமினோ அமிலங்கள் இருப்பதால் சிறந்த புரத உணவாகச் சொல்லப்படுகிறது.

முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள லூட்டின் மற்றும் ஜியோஸாந்தின் என்ற இரண்டு பிரதான ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்துக்கள் வயதானவர்களின் மாகுலர் டி ஜெனரேஷன் பிரச்னையால் வரும் பார்வை பாதிப்புகளை தவிர்க்கிறது. கண் புரை ஏற்படுவதையும் தவிர்க்க இது உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவில்தான் 5 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. அதில் 1.5 கிராம்தான் கெட்ட கொழுப்பு. அத்துடன் கரையும் தன்மையுள்ள வைட்டமின்களும் உள்ளன. முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம் என்று நினைப்பவர்களும்கூட மஞ்சள் கருவை ஒதுக்கிவிட்டு, வெள்ளைக்கரு பகுதியை மட்டும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

முட்டையை காலை உணவாக சாப்பிடுவது நல்லது. இதனால் உடலுக்கு நல்ல சக்தியும், உற்சாகமும் கிடைக்கும் என்கிறார்கள். காலையில் முட்டை சாப்பிட்டால் வயிறு நீண்ட நேரம் நிறைந்த உணர்வு ஏற்படும். இதனால் மதிய உணவு மற்றும் மாலை டிபன், ஸ்நாக்ஸ் சாப்பிடுவது குறைந்து, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் என்கிறார்கள் அமெரிக்க கனெக்டிகட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

மேலும், காலை உணவாக முட்டை சாப்பிடுகிறவர்கள் கனிவுடன் நடந்துகொள்வார்கள். காரணம் அதிலுள்ள டிரைப்போபேன் எனும் அமிலம்தான் என்கிறார்கள். இது மூளையில் செரட்டோனின் அதிகம் சுரக்க வைத்து, மனதில் கருணை எண்ணத்தை உருவாக்குகிறது என்கிறார்கள்.

பெண்கள் தினமும் முட்டை சாப்பிட்டால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 44 சதவீதம் குறைந்து விடுகிறதாம். தினமும் ஒரு முட்டை சாப்பிடுகிறவர்களுக்கு மற்றவர்களைவிட ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ட்ரோக் வரும் வாய்ப்பு குறைவு என்பதை பாஸ்டன் ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உங்கள் வயதை விட இளமையாகத் தோற்றமளிக்க, உங்கள் உணவில் முட்டை சேர்த்துக்கொள்ளலாம். காரணம், இதில் முதுமை எதிர்ப்புப் பண்புகள் நிறைய இருப்பதுதான். நம் உடலுக்கு அத்தியாவசியத் தேவைகளாக உள்ள புரதச் சத்தும், ஊட்டச் சத்துக்களும் முட்டையில் நிறைவாக உள்ளன. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற நபர்கள் தினசரி ஒரு முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வழக்கம்போல எப்போதாவது ஒரு முட்டை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், அவர்கள் தினசரி முட்டை சாப்பிடக்கூடாது என்று சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது. ஆமாம், தினசரி முட்டை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கிறது என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com