மாதுளை பழச்சாறின் மிகச்சிறந்த எட்டு நன்மைகள்!

மாதுளை பழச்சாறின் மிகச்சிறந்த எட்டு நன்மைகள்!

உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவை தேடுகிறீர்களா? பல்வேறு நன்மைகள் அடங்கிய மாதுளை பழ சாறை முயற்சி செய்து பாருங்கள். மாதுளை பழம் உடல் ஆரோக்கியத்துக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய இந்தப் பழத்தின் சாறை வடிகட்டாமல் அருந்தலாம்.

மாதுளை சாறில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. இந்த அற்புத, ஆரோக்கிய பானத்தை குடிப்பதால் பல நன்மைகளையும் பெறலாம்.

1.உடல் எடையை குறைக்க உதவும்: மாதுளையில் உள்ள பாலிபினால்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகின்றன. இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரத்துக்கு நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்தப் பழச்சாறை சர்க்கரை சேர்க்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

2.செரிமானத்துக்கு நல்லது: செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குடல் அழற்சி நோய் போன்ற செரிமான பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறவும் மாதுளை சாறு உதவும். இதில் உள்ள கலவைகள் குடலில் நல்ல பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும், செரிமான மண்டலத்தில் ஏற்படும் எரிச்சலையும் குறைக்கும். மாதுளையில் உள்ள நார்ச்சத்து சில செரிமான பிரச்னைகளை தடுக்கவும் உதவுகிறது.

3. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்: ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த்’ (NIH) ஆய்வுப்படி, மாதுளை புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்க அல்லது சிகிச்சையளிக்க உதவும். மாதுளை சாறில் புற்றுநோய் செல்களை அழிக்க அல்லது உடலில் அவற்றின் வளர்ச்சியை குறைக்க உதவும் கலவைகள் உள்ளதாக பல ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

4. இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: மாதுளை சாறை குடிப்பது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பக்கவாதம் மற்றும் மாரடைப்பின் அபாயத்தை குறைக்கவும் உதவும். மேலும், இதில் உள்ள கலவைகள் ரத்த அழுத்தம் மற்றும் தமனி அழற்சியை குறைக்க உதவுகின்றன. இதனுடன் இதயம் தொடர்பான மார்பு வலி, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்துக்கு காரணமான அடைப்பின் வளர்ச்சியையும் தடுக்கலாம்.

5. ஆன்டி ஆக்ஸிடன்ட்: சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கிரீன் டீயுடன் ஒப்பிடும்போது மாதுளை சாறு மூன்று மடங்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட் செயல்பாட்டைக் காட்டுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். ஏனெனில் இதில் உள்ள பாலிபினால்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

6. கீல்வாத எதிர்ப்பு சக்தி: மாதுளைச் சாறில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. இதில் உள்ள கூறுகள் கீல்வாதத்தை உண்டாக்கும் என்சைம்களை தடுப்பதோடு, குருத்தெலும்பு சிதைவையும் தாமதிக்கின்றன.

7. சருமத்துக்கு நல்லது: தீங்கு விளைவிக்கும் அழகு சாதனக் கலவைகள், மாசுபாடு மற்றும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா (UV) கதிர்களினால் சருமம் பாதிக்கப்படுகிறது. மாதுளை சாறு குடிப்பதால் உங்கள் சருமம் புற ஊதா கதிர்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஏனெனில், இதில் உள்ள கலவைகள் சருமத்தில் நச்சுக்களின் உற்பத்தியை தடுக்கின்றன.

8. சிறுநீரக ஆரோக்கியம்: மாதுளை சாறு குடிப்பது சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கற்கள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது. மாதுளைச் சாறில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இருப்பினும் பக்க விளைவுகளை தடுக்க, இதனை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் குழந்தையின் மூளை சுறுசுறுப்பாக இயங்க, மாதுளைச் சாறை அருந்தக் கொடுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com