கஞ்சா செடிக்கு ஏன் இந்த மவுசு?

கஞ்சா செடிக்கு ஏன் இந்த மவுசு?

‘கஞ்சா’ எனும் போதைப் பொருளை நம் நாட்டில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இது இந்திய குற்றவியல் நடைமுறைப்படி இது தண்டனைக்குரியதாகும். அண்மையில், ‘ஜெர்மனி நாட்டின் வயதுக்கு வந்தோர் தினமும் 25 கிராம் கஞ்சா பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பப்படுவோர் தங்கள் வீட்டில் மூன்று கஞ்சா செடிகளை வளர்க்கலாம்’ என அனுமதித்தது. ஏற்கெனவே பல ஐரோப்பிய நாடுகளில் கஞ்சாவை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டா முதன்முதலாக பொதுமக்கள் கஞ்சாவைப் பயன்படுத்திக்கொள்ளும் அனுமதியை 2021ல் வழங்கியது. தற்போது 58க்கும் மேற்பட்ட நாடுகளில் கஞ்சாவைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.

போதைப்பொருள் எனக் கருதப்படும் கஞ்சாவை இப்படி திடீரென பல நாடுகளில் முன்னிலைப்படுத்த என்ன காரணம்? எல்லாம் அதிலுள்ள மருத்துவ குணங்கள்தான். கஞ்சா செடி ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டதாகும். இதனை அறிவியல் ரீதியாக கானபிஸ் இண்டிகா (Cannabis indica), கானபிஸ் சட்டீவா (Cannabis sativa) என இரு செடிகளாக இந்தியாவில் வகைப்படுத்தியுள்ளனர். மேலும், கஞ்சா செடியின் இலைகள், மொட்டுகள், விதைகள், நார், அதனுடைய பிசினைக் கொண்டு உருவாக்கப்படும் எண்ணெய் என அனைத்தும் பயன்பாட்டுக்குரியவை.

முக்கியமாக, இந்தியாவில் கி.மு. ஆயிரமாவது ஆண்டு முதல் வலி நிவாரணியாகவும், மயக்க மருந்தாகவும், தொழுநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். பின்பு 19ம் நூற்றாண்டில் வலிப்பு, மனநோய், அல்சைமர், புற்றுநோய் என மருத்துவப் பயன்பாட்டில் கஞ்சா இடம்பிடிக்க ஆரம்பித்தது. ஹெபடைடிஸ் சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை பல மாதங்கள் வரை நீடிக்கும். சிகிச்சையினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகளில் மருத்துவப் பயன்பாடுகளுக்காக கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. குடல் அழற்சி நோய்கள் மற்றும் பார்கின்சன் நோய்க்குத் தரப்படும் மருந்துகளில் கஞ்சா சேர்க்கப்படுகிறது.

கஞ்சாவில் நூற்றுக்கணக்கான ரசாயன கலவைகள் உள்ளன. இதுபோன்று வேறு எந்தப் பொருளிலும் இந்த அளவு ரசாயனங்கள் இருகாது. இந்த பிரத்யேக ரசாயன அமைப்பு காரணமாக நாள்பட்ட வலிக்கு காஞ்சா நிவாரணம் அளிக்கிறது. உடலில் இன்சுலினைக் கட்டுப்படுத்த உதவும் கஞ்சாவின் பண்பினால், உடல் பருமனை குறைக்கவும், நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

கஞ்சாவின் மிகப்பெரிய மருத்துவ நன்மைகளில் ஒன்று புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான குணம் ஆகும். அதிலும் குறிப்பாக, சில வகை புற்றுநோய் சிகிச்சைக்கு கஞ்சா சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. கஞ்சாவில் உள்ள எண்டோகன்னாபினாய்டு கலவைகள் மனச்சோர்வு மற்றும் மன இறுக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. உடைந்த எலும்புகளை குணப்படுத்த உதவும் கன்னாபிடியோல் என்ற ரசாயனம் கஞ்சாவில் இருக்கிறது. கண் பார்வையில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் கிளௌகோமா பிரச்னைக்கு தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. ஹெபடைடிஸ் சி உடன் தொடர்புடைய பக்கவிளைவுகளை குறைப்பதோடு, சிகிச்சையின் செயல்திறனை அதிகரிக்கிறது.

கஞ்சா செடியில் உள்ள வேதிப்பொருளுக்கான பெயர் டெட்ராஹைட்ரோகனாபினால் (THC) ஆகும். இந்த வேதிப்பொருள் மூளையின் செயல்பாட்டை குறைத்து போதையை ஏற்படுத்தும். எண்ணற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட கஞ்சா, போதைப்பொருள் என்னும் மாய வலையில் சிக்கியது. இதன் பொருட்டே கஞ்சா மூலம் சமூகத்தில் நிலவும் வன்முறையை அறிந்த ஐநா சென்ற நூற்றாண்டில் உலகெங்கும் கஞ்சாவைப் பயன்படுத்தத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து 1985ம் ஆண்டு முதல் இந்தியாவும் கஞ்சாவின் பயன்பாட்டை அனைத்து வடிவத்திலும் தடை செய்தது. எனினும், மருத்துவத்தில் தனக்கென நீங்கா இடத்தைப் பிடித்திருக்கும் கஞ்சாவை மீண்டும் பயன்பாட்டுக்குக்குக் கொண்டுவர ஆசைப்பட்ட அமெரிக்கா, 2004 முதல் தடையை நீக்கிக் கட்டுப்பாடுகளுடன் சில மாநிலங்களில் அதனை அனுமதித்தது. அதைத் தொடர்ந்து, தற்போது 26 மாகாணங்களிலும் தடை நீக்கப்பட்டதுடன், 11 மாகாணங்களில் அதிகாரபூர்வமாகத் தனிமனிதப் பயன்பாட்டிலும் கஞ்சா இருக்கிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகமும் எந்த வகையான கஞ்சாவைப் பயன்படுத்தலாம் என தனது ஆராய்ச்சியின் மூலம் விரிவாகத் தெளிவுபடுத்தியது. சி.பி.டி. கொண்டிருக்கும் கஞ்சா சிபி-2 ரிசெப்டார் என்னும் ஏற்பியுடன் இணைவதால் மருத்துவம் சார்ந்த வலி நிவாரணியாக இருக்கும். எனவே, சி.பி.டி. கொண்டிருக்கும் கானபிஸ் என்ற கஞ்சாதான் அமெரிக்காவிலும் கனடாவிலும் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் 2018ம் ஆண்டு முதல் சில கட்டுப்பாடுகளுடன் மருத்துவம் மற்றும் தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக கஞ்சா செடி வளர்க்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் மணிப்பூரிலும் அனுமதி தரப்பட்டது. அதனையடுத்து, தற்போது இமாச்சல பிரதேச மாநிலமும் அதற்கு அனுமதி தரப்போவதாகக் கூறியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் குல்லு, மண்டி மாவட்டங்களில் விளையும் கஞ்சாவுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உண்டு.

மீண்டும் ஒருமுறை கூறுகிறோம், ‘கஞ்சா’ எனும் போதைப் பொருளை நம் நாட்டில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். இது இந்திய குற்றவியல் நடைமுறைப்படி இது தண்டனைக்குரியதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com