பெண்களே கவலையை விடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள்!

பெண்களே கவலையை விடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள்!

வேலைக்குச் செல்லும் பெண்களும், வீட்டிலிருக்கும் பெண்களும் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாகக் கவலைப்படுவதில்லை. எத்தனை வேலைகள் பெண்களுக்கு இருந்தாலும், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அதுசரி. உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது என்கிறீர்களா? வீட்டை நிர்வகிக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, வேலைக்குப் போகும் பெண்களாக இருந்தாலும் சரி சில நடைமுறைகளைப் பின்பற்றினாலே ஆரோக்கியமாக இருக்க முடியும்.

பெண்கள் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடித்தால்தான் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும். தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.

30 முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்கள் முதலில் வருடத்துக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். குறிப்பாக, மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தில் வலி, வீக்கம், கட்டி இருக்கிறதா என்பதையும், அரிப்பு இருக்கிறதா என்பதையும் மருத்துவரிடம் சென்று பிரச்னைகளை கூறி, ஆலோசனை பெற வேண்டும். பின்னர் அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

வயது அதிகரிக்க, அதிகரிக்க சருமத்தில் எண்ணெய் சுரப்பது குறைந்துகொண்டே வரும். தோல் வறண்டு போவதால் சுருக்கங்கள் ஏற்படும். கண்களில் கருவளையம் ஏற்பட்டு தோற்றமே மாறிவிடும். எனவே, நடுத்தர வயது பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை தோல் சிகிச்சை நிபுணர்களிடம் தங்கள் சருமத்தைக் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.

பொதுவாக, பெண்கள் இரவு 7 அல்லது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ‘போதிய அளவு தூக்கம் இருந்தால்தான் ஹார்மோன் குறைபாடுகள் வராது’ என்கின்றனர் மருத்து நிபுணர்கள். தேவையான அளவு தூங்கினாலே உடலும் மூளையும் புத்துணர்ச்சி பெறும். உடம்பில் ஹார்மோன் குறைபாடுகள் இருந்தால் தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை பெறலாம்.

ஆரோக்கியமாக இருந்தாலே அழகுதான். பெண்கள் அந்தந்த வயதுக்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்காலம். உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

பெண்களுக்கு உடல் ரீதியாக சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடற்பயிற்சி செய்வதால், உடல் எடை கூடுதல், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய்கள் வராமல் தடுக்கலாம். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல் உங்களுக்கு பிடித்தமான வேலைகளில் ஈடுபட்டு உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டிருந்தால் எந்த பிரச்னையும் இல்லாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சிலருக்குக் குடும்பப் பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை காரணமாக மன அழுத்தம் ஏற்படுவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதாவது தூக்கமின்மை, மனச்சோர்வு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக் கொண்டிராமல், வரவுக்கு தகுந்த செலவு செய்து வந்தால் மன அமைதி ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com