இஞ்சி இல்லாத சமையல் இல்லை. இஞ்சி (Health Benefits of Ginger) பல்வேறு விதமான நோய்களைப் போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது. அவற்றின் பயன்பாடுகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
காயகல்ப மருந்துகளில் ஒன்றென கூறப்படும் இஞ்சியை இந்தியாவின் பல இடங்களில் பயிரிடுகின்றனர். இதனை உணவுடன் உட்கொள்வதால் உடலுக்கு உஷ்ணத்தை அளித்து அகத்தில் உள்ள வாயுவை நீக்கி, பசியையும், நல்ல செரிமானத்தையும் உண்டாக்கும்.
கடைக்கு போய் இன்ஜி வாங்க முடியலையா? வீட்டில் இருந்தே இஞ்சி போடி வாங்கி பயன்படுத்தலாம்! உடனே வாங்க...
குணமாகும் நோய்கள்:
கார்ப்புச் சுவையுடனும் வெப்பமான தன்மையுடனும் கூடிய கார்ப்பு வகை பிரிவினை சேர்ந்த இஞ்சியினால் இருமல் , ஈளை, அழல், குத்தல் வலி, கோழைக்கட்டு, செரியாக்கழிச்சல், முதலியன நீங்கி பசி உண்டாகும்.
வேறு பெயர்கள்:
கண்களுக்கும் மிகுந்த நலன் அளிக்கவல்ல இஞ்சியை முறையே அல்லம், இலாக்கொட்டைமதில், ஆத்திரகம், நடுமறுப்பு, ஆர்த்தகரம் என்ற பெயர்களாலும் அழைப்பார்கள்.
மருந்து:
இஞ்சிக்கிழங்கை ஊறுகாய், தேனுறல், வெல்லப்பாகு ஊறல், பழச்சாற்று ஊறல், துவையல் என பலவகையாகப் பதப்படுத்தி உட்கொள்வர்.
பயன்படுத்தும் முறை:
இஞ்சியை தோல் நீக்கி கீற்றாக அரிந்து தேனில் ஊறவைத்து தினமும் கல்ப முறைப்படி உட்கொண்டு வந்தால் நரைதிரை, மூப்பு இன்றி நீண்ட நாள் இருப்பதுடன் உடலில் அழகும் மனோபலமும் ஏற்படும். இதற்கு சுத்த பசுநெய் சமமாக கலந்து பத்திய உணவாகக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் இஞ்சி சாற்றுடன் ஒரு கோழி முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு கலந்து கரண்டியில் இட்டு சிறிது நெய் விட்டு காய்ச்சி, நீர் சுண்டியவுடன் வெந்த பதத்தில் வருவதை தினமும் உட்கொண்டு வருவதால் இரைப்பைச் சுரம் பலப்பட்டு , தாது வலுத்து அதிக ஞாபக சக்தி ஏற்படும்.
இஞ்சித் துண்டை வாயிலிட்டு மென்று அடக்க தாகம் தீருவதுடன், தொண்டைப் புண், குரல் கம்மல் முதலியனதும் நீங்கும்.
இதே போல் இஞ்சி சாறும், வெங்காய சாறும் சமமாக கலந்து உட்கொள்ள வாந்தி, ஏக்காளம் நீங்கும். நீரிழிவு நோய்க்கு சுக்குடன் இஞ்சிச் சாறும் கல்கண்டும் சேர்த்து கொடுத்து வர பயன் கிடைக்கும்.
இஞ்சிச் சாற்றை கால் ஆழாக்கில் இருந்து ஒன்றரை ஆழாக்கு வரை நாளடைவில் உட்கொண்டு வர பெருவயிறு நோய் குணமாகும். இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றி தடவ செரியாதக் கழிச்சல் தீரும்.
இஞ்சி லேகியம்:
இஞ்சியின் மேல் தோலை நீக்கி, அரைத்துப் பிழிந்து சாறு எடுக்கவும். கிராம்பு, ஏலம், சீரகம், திப்பிலி, மிளகு ,ஜாதிக்காய், சாதிப்பத்திரி, கோட்டம், கடுக்காய், தாளிச்சப் பத்திரி, சிறு நாகப்பூ, அதிமதுரம் ஆகியவற்றை சூரணம் செய்து வைக்கவும். சீனியை பாகுப்பதமாக காய்ச்சி மேற்கண்ட சூரணத்தை இஞ்சி சாற்றில் கலந்து கொட்டி நன்றாக கிளறி, ஆறவிட்டு அதனுடன் நெய்யும் தேனும் கலந்து பிசைந்து லேகியமாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை தினசரி சாப்பிட்டு வர கபம், வாதசூலை, பேதி, சந்நிபாத சுரம், வாத கோபம் முதலியவை விரைவில் நீங்கி நல்ல பசி உண்டாகி உடல் வலிமை ஏற்படும்.
இஞ்சித் தைலம்:
முற்றிய இஞ்சியை தோல் சீவி அரைத்து பிழிந்து சாறெடுத்து அதை கலங்காமல் தெளிய வைத்து வடித்து, அதனுடன் சம அளவு பசும்பால், நல்லெண்ணெய் சேர்த்து பழகிய மண்பாண்டத்தில் விட்டு காய்ச்சி வண்டல் மெழுகு பதமாக வரும் பொழுது இறக்கி ஆறவைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு ,இந்த தைலத்தை வாரம் இரு முறை தலையில் தேய்த்து முழுகி வர ஜலதோஷம், தலைவலி, நீர் பீனிசம், கழுத்து நரம்பு இசிவு, தலைக்கனம், தொடர் தும்மல் முதலியவை நீங்கும்.
இஞ்சி மலிவாக கிடைக்கும் சமயங்களில் அதனை வாங்கி இதுபோல் பக்குவப்படுத்தி வைத்துக் கொண்டால், எப்பொழுதும் கைவசம் மருந்து இருக்கும். தேவையான பொழுது பயன்படுத்தி நோய்நொடி இன்றி ஆரோக்கியம் காக்கலாம்.
கடைக்கு போய் இன்ஜி வாங்க முடியலையா? வீட்டில் இருந்தே இஞ்சி போடி வாங்கி பயன்படுத்தலாம்! உடனே வாங்க...