சோளம் இன்று சூப்பர் உணவாக அனைவராலும் விரும்பப்படுகிறது. அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் மிகவும் முக்கியமான தானியப் பயிராகும். இவை ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. சோளத்தில் பல வகைகள் உள்ளன. ஸ்வீட் கார்ன், ஃப்ளோர் கார்ன், பாப்கார்ன், ஃபீல்ட் கார்ன் மற்றும் ஃபிளிண்ட் கார்ன் என ஐந்து வகைகள் மிகவும் முக்கியமானவை.
கருப்பு, சிவப்பு, நீலம், ஊதா, மஜந்தா நிறம் போன்ற வண்ணச் சோளங்கள் ஃபிளிண்ட் சோளம் என அழைக்கப்படுகிறது. நம்பினால் நம்புங்கள் உண்மையில் இவை 3000 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்பட்டு வருகின்றன. அத்துடன் பண்டைய காலங்களில் நம் உணவு முறையின் முக்கிய பகுதியாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால், இவை இன்று இந்தியாவில் மிசோரமில் பரவலாக வளர்க்கப்படுகின்றது. இதனை உள்நாட்டில் ‘மிம் பான்’என்று அழைக்கிறார்கள்.
இவற்றின் நிறத்திற்குக் காரணம் அதிக பினாலிக் உள்ளடக்கம் மற்றும் அந்தோ சயினின்கள் இருப்பதுதான் இவற்றின் தனித்துவமான நிறத்திற்கு காரணமாகும். ஃபிளிண்ட் சோளத்தில் மிகக் குறைந்த அளவு நீர்ச்சத்து உள்ளது. மிகவும் கடினமான வெளிப்புற அடுக்கைக் கொண்டது. இவ்வகை சோளமானது வழக்கமான இனிப்பு அல்லது வயல் சோளத்தைப் போலவே வளரும்.
சமதள பூமியில் மட்டுமே அதிக விளைச்சலைக் காணும் மக்காச்சோளங்கள் இப்பொழுது மலைப்பகுதிகளிலும் பெருமளவு விளைச்சல் கண்டு வருகிறது. பெரு, பொலிவியா, ஈக்வடார் ஆகிய நாடுகளில் ஊதா நிற சோளங்கள் சூடான நீரில் ஊற வைக்கப்பட்டு இவற்றின் ஆழமான நிறம் பொதுவாக உணவு மற்றும் பானங்களில் வண்ணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மது பானங்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
மாதுளை மற்றும் அவுரி நெல்லிகளில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்ட்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இந்தச் சோளங்களில் உள்ளது. இவை உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை எதிர்த்து போராடும் ஆற்றலை கொண்டுள்ளன. இந்த வகை வண்ணச் சோளங்கள் சாப்பிடுவது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மஞ்சள் சோளங்களைப் போல் இவை பிரபலமாக இல்லாவிட்டாலும் ஊதா, நீலம், சிவப்பு மற்றும் கருப்பு சோளங்கள் தென் அமெரிக்க நாடுகளில் ஏராளமாக காணப்படுகின்றன. அங்கு இவை பேக் செய்யப்பட்ட சிப்ஸ், பாப்கான் அல்லது மாவு வகைகளாக மாற்றப்படுவதைக் காணலாம். இந்தியாவில் மிசோரமில் இந்த வண்ணச் சோளங்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இவற்றை தினசரி சமையல்களிலும், இனிப்பு வகைகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
சோளம் கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்தது. என்றாலும் இதனை அளவாகவே பயன்படுத்த வேண்டும். இவற்றை அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும்போது வாய்வு, மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவை உண்டாகும்.