பண்டைய காலங்களில் இருந்தே மனிதன் தன்னைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களை தன் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தி வருகிறான். அந்த வகையில் நம் வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வழிகளிலும் எளிதில் கிடைக்கும் பூசணி இலைகள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. பூசணி இலைகள் நம் உடலுக்கு பலவகையான நன்மைகளை அளிக்கக்கூடியது. இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன.
பூசணி இலைகளில் வைட்டமின் ஏ, சி, இ, கே போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதுதவிர இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு போன்ற தாது உப்புகளும் உள்ளன. மேலும் இதில் பீட்டா கரோட்டின், லீயூட்டின் போன்ற ஆன்ட்டி ஆக்சிடன்ட்களும் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமானவை.
பூசணி இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்:
பூசணி இலைகளில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்று நோய்களுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளும். இதில் நிறைந்து காணப்படும் பீட்டா கரோட்டின், லியூட்டின் போன்றவை கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.
இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. பூசணி இலைகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கவும் பூசணி இலைகள் உதவுகிறது. தொடர்ச்சியாக பூசணி இலைகளை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
எனவே, ஆரோக்கியமாக இருப்பதற்கு பூசணி இலைகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை பலவகையான உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். பூசணி இலைகளை நறுக்கி போட்டு சூப், காய்கறி, சாலட் போன்றவற்றில் சேர்க்கலாம். அல்லது அவற்றை நேரடியாக வதக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். பூசணி இலைகளைப் பயன்படுத்தி சட்னி பச்சடி போன்றவற்றை தயாரித்து இட்லி தோசையுடன் வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
பூசணி இலையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு பல வகையான நன்மைகளை அளிப்பதால் இதை நம் உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு என்றும் ஆரோக்கியத்துடன் இருப்போம்.