அரிசி களைந்த நீரின் அதிசயங்கள்! இனி வீணாக்க மாட்டீர்கள்தானே?

Rice water
Rice water
Published on

அந்தக் காலத்தில் மாடுகள் கறக்கும் பாலில் ஊட்டச்சத்துகள் நிறைந்து இருந்ததன் காரணம் தெரியுமா? வீடுகளில் அரிசி களையும் நீரை ஊற்றி வைப்பதற்கென்றே பானைகளை வைத்திருப்பார்கள். அதில் சேரும் தண்ணியையே கழனித்தண்ணீ என்று சொல்லி சேகரித்து மாடுகளுக்கு குடிக்கத் தொட்டியில் ஊற்றுவது வழக்கம். இந்த சத்து மிகுந்த நீரை குடித்ததால்தான் மாடுகள் சத்துள்ள பாலைத் தந்தது என்பார்கள்.

இதன் மகத்துவம் தெரியாமல் நாம் அரிசி களைந்த நீரை வீணாக்கி வருகிறோம். வாருங்கள்.. இந்தப் பதிவில் அரிசி களைந்த நீரின் அதிசயங்களைப் பார்ப்போம்.

அரிசி கார்போஹைட்ரேட் நிறைந்தது என அறிவோம். நாம் கழுவி கீழே ஊற்றும் அரிசி கழுவிய நீரில் கார்போஹைட்ரேட்டுகளுடன் அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள், வைட்டமின்- பி மற்றும் வைட்டமின் இ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை உபயோகித்து அழகு முதல் ஆரோக்கியம் வரை எண்ணற்ற பலன்கள் அடையலாம் என சொல்லப்படுகிறது. அவை என்ன தெரியுமா?

வறட்சியான தலை முடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பின் அரிசி களைந்த நீரினால் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து நுனி வரை அலசினால் முடிக்கு வலிமையும், இயற்கையான பொலிவும் கிடைத்து வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

இதையும் படியுங்கள்:
இஸ்ரேல் vs ஈரான்: சட்டமா, சுயபாதுகாப்பா?
Rice water

எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்கள் இதை பயன்படுத்தி முகம் கழுவினால், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி சீரான சருமம் பெறலாம்.

தூய்மையான மெல்லிய பருத்தித் துணியை அரிசி கழுவிய நீரில் நனைத்து, அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக துடைத்தால் அல்லது மூடினால் சருமத்தில் உள்ள துளைகள் மறைந்து சருமம் பொலிவுடன் திகழும்.

தேங்காய் எண்ணெயுடன் சிறிது அரிசி நீரைக் கலந்து நன்றாக குழைத்து மசாஜ் செய்யும் போது சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி இளமைத் தோற்றம் பெறலாம்.

உடலில் வெப்பநிலை அதிகரித்து சூடாக உணர்ந்தால் அரிசி நீரை உட்கொண்டால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக உணரலாம்.

அரிசி கழுவிய நீரை குளியலிலும் சேர்க்கலாம். ஆம்... குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் மன அழுத்தமும், பதற்றமும் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

குழந்தைகளின் கால்கள் சத்தின்றி நிற்க முடியாமல் போனால் அரிசி கழுவிய நீரை கால்களின் மேல் ஊற்றி சிறிய அழுத்தம் தந்து பிடித்து விட்டால் கால்களில் உள்ள எலும்பு பலம் பெறும் என்பது பாட்டி காலத்து நம்பிக்கை.

அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்தும்போது, இதில் உள்ள மாவுச்சத்தினால் வெடிப்பு, முகப்பரு, தோல் அழற்சி ஆகியவை நீங்கும். அத்துடன் தினமும் இதில் முகத்தைக் கழுவினால் கருமை நீங்கி நிறமாறுதலைக் காணலாம்.

அரிசியை நல்ல தண்ணீரில் சுமார் அரை மணி நேரம் வரை ஊறவைத்து அதை வடிகட்டி மூலம் வடித்து சுத்தமான பாத்திரத்தில் சேமித்துக் கொண்டு தேவைப்படும் போது உபயோகித்து மீதத்தை ப்ரிட்ஜ்ல் வைத்து அடுத்த நாளும் பயன்படுத்தலாம்.

இன்னும் பல பயன்களைத் தரும் இந்த நீரை இனி வீணாக்க வேண்டியதில்லை தானே?

முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com